சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2001ம் ஆண்டு முதல் தற்போது வரை இருந்து வருகிறார் கே.பி.அன்பழகன். இவர் அதிமுக ஆட்சிக் காலத்தில் 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக பதவியில் இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாகவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதைத் தொடர்ந்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார், கேபி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகிய ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்திருந்தனர். கே.பி.அன்பழகன் தேர்தலின்போது வேட்பு மனுவில் கூறப்பட்டிருந்த சொத்து மதிப்பை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த விசாரணையை மேற்கொண்டனர். சென்ற ஆண்டு ஜனவரி மாதம் கே.பி.அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை, தருமபுரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் அன்பழகன் பெயரிலும் அவரது உறவினர்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 85 ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாகத் தெரிய வந்தது.

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், ‘முன்னாள் அமைச்சர் அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தாலும், இதுவரை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் உடனே அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு கடந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து அன்பழகன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். நீதிமன்றம் உத்தரவிட்டு பத்து மாதங்கள் ஆகிய நிலையில், இன்றைய தினம் கே.பி.அன்பழகன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை அதிகாரிகள் தருமபுரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

இதில் கே.பி.அன்பழகன், மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகன் ரவிசங்கர், அக்கா மகன்கள் சரவணன், காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மாணிக்கம், பள்ளி நிர்வாகி தனபால், உள்ளிட்ட பதினோறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 58 இடங்களில் நடைபெற்ற சோதனை மற்றும் விசாரணையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் 45 கோடி ரூபாய் சொத்து குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கே.பி.அன்பழகன் 11.32 கோடி ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், தற்போது வருமானத்துக்கு அதிகமாக 45.20 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com