‘உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு எதிரில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தை நீதிமன்றத்துக்கு விற்பனை செய்யக் கூடாது. அப்படி கோயில் நிலத்தை விற்றால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்’ என்று தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா எச்சரித்து இருக்கிறார்.
அவர் இன்று திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ''உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு முன் பகுதியில் இருக்கும் பல ஏக்கர் கோயில் நிலத்தை நீதிமன்ற பயன்பாட்டுக்கு குத்தகைக்கு கேட்கப்பட்டு உள்ளது. அந்த நிலத்தை நீதிமன்றத்துக்கு விற்பதாக அறநிலையத் துறை தெரிவித்து இருக்கிறது. ஆனால், கோயில் நிலங்களை எந்தப் பொது பயன்பாட்டுக்காகவும் விற்பனை செய்யக் கூடாது என உயர் நீதிமன்ற அமர்வு 2018 மற்றும் 2021ல் தீர்ப்பளித்து இருக்கிறது. ‘இந்தக் கோயில் நிலத்தை உயர் நீதிமன்றத்துக்கு விற்பனை செய்தால், தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கோயில் நிலங்களையும் விற்பனை செய்யலாம்’ என நினைக்கின்றனர். கோயில் சொத்துகளை விற்பனை செய்வது, கோயில் நகைகளை உருக்குவது, உண்டியல் பணத்தை கொள்ளையடிப்பது போன்ற நோக்கத்துடன் தமிழக முதல்வரும், அமைச்சர் சேகர்பாபுவும் செயல்பட்டு வருகின்றனர்.
இதுபோன்று கோயில் நிலங்களை விற்க அறநிலையத் துறைக்கு உரிமை இல்லை. அதையும் மீறி கோயில் நிலங்களை விற்பனை செய்தால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு 150 ஏக்கர் நிலம் உள்ளது. இதனால் உயர் நீதிமன்றத்துக்கு மேலும் நிலம் தேவையில்லை” என்று செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார்.