
சிதம்பரம் நடராஜர் கோயில் பூஜையின்போது இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொண்டதாக தீட்சிதர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அங்குள்ள தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி அங்கு சென்ற அறநிலைய அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் அத்துமீறி கனகசபை மீது ஏறியதாக, அப்போது பூஜையில் இருந்த கற்பக கணேச தீட்சிதர் என்பவர் நகர காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார்.
அதில், பூஜை பணியில் ஈடுபட்டிருந்த தன்னை காவல்துறையினர் ஆக்ரோஷமாக தள்ளிவிட்டு நிலைகுலைய செய்ததுடன், தான் அணிந்திருந்த ஆடை மற்றும் பூணூல் அறுந்துபோகும் வகையில் தள்ளிவிட்டதாக கூறியுள்ளார். பூஜை பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் எதிர்பாரத வகையில் தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், தனக்கு அச்சமும், உடல் வலியும் உள்ளதால் நேரில் வந்து புகார் கொடுக்க மன தைரியம் இல்லை என்பதால், புகார் மனுவை பதிவு தபாலில் அனுப்பியுள்ளதாக கற்பக கணேச தீட்சிதர் தெரிவித்துள்ளார். அத்துடன், புகார் மனு நகலை விழுப்புரம் சரக டிஐஜி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிதம்பரம் ஏஎஸ்பி ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.