புகார் அளிக்க வந்த மூதாட்டியை இப்படியா தரக்குறைவாகப் பேசி விரட்டுவது? காவலரின் அராஜகம்!

புகார் அளிக்க வந்த மூதாட்டியை இப்படியா தரக்குறைவாகப் பேசி விரட்டுவது? காவலரின் அராஜகம்!

மருமகள்கள் தன்னை கவனித்துக் கொள்வதில்லை என பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த மூதாட்டியை அங்கிருந்த காவலர் அலட்சியப்படுத்தி தரக்குறைவாகப் பேசி அலைக்கழித்து விரட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மூதாட்டி அளித்த புகார் மனுவை ஏற்க மறுத்து அவரைத் தரக்குறைவாகப் பேசி அந்த் இடத்திலிருந்து அப்புறப்படுத்திய காணொளி இணையத்தில் வெளியாகி உள்ளது.

பள்ளிப்பாளையம் காவல்நிலையத்தின் கம்பி கேட்டின் அருகே அமர்ந்திருந்த மூதாட்டி ஒருவரை காவல் நிலையத்தின் உள்ளே இருந்து வந்த காவலர் ஒருவர், ’ஏய் எந்திரி, இது என்ன தெருவா? இங்க எல்லாம் உட்காரக் கூடாது, போ, போயிட்டு காலைல வா’

-என்று வெகு அலட்சியமாக அவரை விரட்டி விடுகிறார்.

உடனிருந்த மற்றொரு காவலர் ஒருவரும் கூட , ’எஸ் ஐ நாளைக்கு காலைல தான் வருவார். இப்ப நீ போ, காலைல வா, இங்க எல்லாம் உட்காரக் கூடாது என்று கூறி அவரும் அந்த மூதாட்டியை வெளியேற்றி அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருப்பது அந்தக் காணொலியில் தெளிவாகத் தெரிகிறது.

காவல்நிலையத்தின் அருகில் நின்றிருந்த பொதுமக்களில் ஒருவர்,

‘ஏன் சார் புகார் எடுக்க மாட்டேங்கிறீங்க?’

-என்ற கேள்விக்கு அந்தக் காவலர் அளித்த பதில்.

‘வா வந்து நீ எடு’

என்பதாக இருந்தது.

காவல் நிலையங்கள் என்பவை மக்களின் குறைகளைத் தீர்க்கத்தானே! அங்கு தனக்கொரு கஷ்டம் என்று தஞ்சமடைந்த வயதான மூதாட்டியை ஆறுதல் சொல்லியாவது வீட்டுக்கு அனுப்பி இருக்கலாம் அதை விட்டு விட்டு சொல்லி வைத்தாற் போல இரு காவலர்களுமே அவரது வயதுக்கு கூட மரியாதை தராமல், இரக்கம் கொள்ளாமல் வெகு அலட்சியமாக அந்த மூதாட்டியை கையாண்டது இந்த காணொலிக் காட்சியை காண்போரை எரிச்சலுக்கு உள்ளாக்கி கண்டனக் குரல் எழுப்ப வைத்திருக்கிறது.

இரு காவலர்களில் ஒருவர், அந்த மூதாட்டிக்குப் பதில் அளிக்கும் விதமாக, விடிஞ்சா, காலைல எந்திரிச்சா, தினமும் இங்க வந்து வந்து நிக்கறயே, எங்களுக்கு இங்க ஸ்டேஷன்ல வேற வேலை எதுவும் இல்லைன்னு நினைச்சயா? வேற வேலை எதுவும் செய்ய வேண்டாமா நாங்க’

- என்று கூறி அலுத்துக் கொள்கிறார்.

அதற்கு அந்தப் பாட்டி;

எனக்கு இத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள், 6 பேரன் பேத்தி இருக்கிறார்கள், யாருமே என்னைக் கண்டு கொள்வதில்லை. பிறகு நான் எப்படி உயிர் வாழ்வது? –

என்று புலம்பியபடி கேட்டுக் கொண்டிருக்க; அதற்கு காவலர்களிடம் ஒரு பதிலும் இல்லை.

இவ்விஷயத்தில் மூதாட்டியின் மேல் தவறா? அல்லது அவரது மருமகள்களின் மீது தவறா? என்பது புகாரை காவலர்கள் ஏற்று அதன் மீது விசாரணை மேற்கொண்டால் அல்லவா தெரியும். இங்கே அதற்கே வழியைக் காணோமே என்று நெட்டிஸன்கள் தங்கள் கருத்துகள் வழியே கோபம் காட்டுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com