சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், விபத்துகளை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களைக் கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. ஆனால், சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சி இந்த சவாலுக்கு ஒரு தீர்வைக் கொண்டு வந்துள்ளது. ஆம், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) அடிப்படையிலான சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற கருவிகள், விபத்து ஏற்படுத்திய வாகனங்களை மிகக் குறைந்த நேரத்தில் அடையாளம் காணும் திறன் பெற்றுள்ளன.
தாய்லாந்தில் உட்டோன் தானி என்ற பகுதியில், அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற இருவர் மீது மோதிவிட்டு தப்பியது. சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை வைத்து சல்லடை போட்டு தேடியும், விபத்து ஏற்படுத்திய வாகனம் எது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் போலீஸார் அந்த இடத்தில் சோதனை செய்தனர். அப்போதுதான் காரின் ஒரு பாகம் அவர்களுக்கு கிட்டியது. அதை போட்டோ எடுத்து சாட்ஜிபிடியிடம் இதுகுறித்தான விளக்கம் கேட்ட நிலையில், சாட்ஜிபிடி வெறும் மூன்று நொடிகளில், அது ஒரு டொயோட்டா ஹிலக்ஸ் விக்கோ சாம்பியன் (Toyota Hilux Vigo Champ) என்ற மாடல் வாகனம் என்பதை கண்டுபிடித்து கொடுத்தது. அதுமட்டுமின்றி, இந்த பாகம் முன்பக்க பம்பர் மேல் இருக்கும் பகுதி என்றும் தெரிவித்தது.
பின்னர், அந்த வழியாக வந்த Toyota Hilux Vigo Champ காரை குறித்த டீடயிலை எடுத்து அந்த வாகனத்தை கண்டுபிடித்துவிட்டனர். விபத்து நடந்த இடத்தில் கிடைத்த ஒரு சின்ன பகுதியை கொண்டு சாட்ஜிபிடி உதவியால் 3 நொடிகளில் அது எந்த வாகனம் என்று கண்டுபிடித்து, பின் சில நாட்களில் குற்றவாளி பிடிக்கப்பட்டது, உண்மையில் காவல்துறையில் ஒரு புதிய மைல்கல் என்று கூறப்பட்டு வருகிறது.
பொதுவாக சாட்ஜிபிடியால் விபத்து நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள், போக்குவரத்து சிக்னல்களில் உள்ள கேமராக்கள், மற்றும் பிற டிஜிட்டல் ஆதாரங்களை பகுப்பாய்வு செய்ய முடியும். சாட்ஜிபிடி, இந்த காணொளிகளில் இருந்து வாகனத்தின் நிறம், மாடல், பதிவு எண், மற்றும் சிறிய அடையாளங்கள் போன்ற தகவல்களை நொடிப்பொழுதில் பிரித்தெடுத்து, ஒரு தரவுத்தளத்துடன் ஒப்பிடுகிறது. இது, வாகனத்தை மிகத் துல்லியமாக அடையாளம் காண உதவுகிறது.
சாதாரண சூழ்நிலைகளில், ஹிட் அண்ட் ரன் வழக்குகளைத் தீர்க்க நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம். ஆனால், சாட்ஜிபிடி போன்ற AI கருவிகளின் உதவியுடன், இந்த செயல்முறை சில நிமிடங்களுக்குள் முடிந்துவிடுகிறது.
AI பல துறைகளில் உதவியாக இருந்து வரும் நிலையில், தற்போது இதுபோன்ற விஷயங்களுக்கு போலீஸாருக்கு உதவி செய்வதால், பல குற்றங்கள் எளிதிலும் விரைவிலும் கண்டுபிடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இதனால் குற்றங்கள் குறையும் என்பதும் உண்மை.