தொடங்கிய நாள் முதலே, அதிகமான பயனர்கள் ChatGPT-ஐ பயன்படுத்தி வந்த நிலையில், முதன்முறையாக அந்த தளத்திற்கான டிராபிக் குறைந்துள்ளது.
2022 நவம்பர் மாதத்தில், OpenAi நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு சேட்பாட், குறுகிய காலத்திலேயே 100 மில்லியன் பயனர்களை எட்டி சாதனையை படைத்தது நமக்குத் தெரியும். ஆனால் கடந்த ஜூன் மாதத்தில் முதன்முறையாக அந்த இணையதளத்திற்கான போக்குவரத்து குறைந்துள்ளதாக Similar web என்ற பகுப்பாய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜூன் மாத நிலவரப்படி, மொபைல் மற்றும் டெஸ்க்டாப்பில் ChatGPT பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 9.7% சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல, 5.7% தனிப்பட்ட பார்வையாளர்களும் குறைந்துள்ளனர். மேலும் ChatGPT பயன்படுத்துவதற்கு பயனர்கள் செலவு செய்த பணத்தின் அளவும் 8.5% குறைந்துள்ளது. டிராபிக் குறைவதென்பது அதன் புதுமை குறைந்து வருகிறது என்பதற்கான அறிகுறியாகும்.
தொடக்க காலத்தில் பயனர்கள் ChatGPT-ஐ மும்முரமாகப் பயன்படுத்தினர். கம்ப்யூட்டர் ப்ரோக்ராம், கதை, கட்டுரைகள், வீட்டுப் பாடங்கள், சந்தேகங்கள் என பல விஷயங்களுக்கு இந்த தளம் பயன்படுத்தப்பட்டது. இது தொடங்கிய இரண்டே மாதத்தில் 100 மில்லியன் பயனர்கள் இதில் ரெஜிஸ்டர் செய்தனர். இது மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது. இன்றளவும் மாதம் 1.5 பில்லியன் பார்வையாளர்களைப் பெறும் இந்த தளம், உலகின் டாப் 20 இணையதளங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த டிராபிக் குறைவு குறித்து OpenAi நிறுவனர் 'சாம் அல்ட்மேட்' கூறுகையில், "இந்த மந்தநிலை ChatGPT இயக்குவதற்கான எங்களுடைய செயலவை ஓரளவு கட்டுப்படுத்த உதவும் எனத் தெரிவித்தார். ஏனென்றால் அதிகப்படியான நபர்கள் பயன்படுத்தும் போது கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க அதிதீவிர கணினி சக்தி தேவைப்படுகிறது அதற்கு அதிக செலவாகும். அந்த செலவைக் கேட்டால் என் கண்ணில் நீர் வடிகிறது" என ChatGPT இயக்குவதற்கு ஆகும் செலவைப் பற்றி அவர் விவரித்தார்.
ChatGPT பயனர்களுக்கு இலவசமாக கிடைத்தாலும், அதனுடைய பிரிமியம் சப்ஸ்கிரிப்ஷன் மாதம் 20 டாலர்கள் என்ற விதத்தில் வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 1.5 மில்லியன் மக்கள் சந்தாதாரர்களாக மாறியுள்ளனர். இந்த ஆண்டு கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர்கள் அவர்களுக்கு வருவாயாக வரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.