சிங்கப்பூர் தொழிலதிபர்களை சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கும் படி முதலமைச்சர் அழைப்பு!

சிங்கப்பூரைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!
சிங்கப்பூர் தொழிலதிபர்களை சென்னை  உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கும் படி முதலமைச்சர் அழைப்பு!
Published on

அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு ஒன்பது நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை சிங்கப்பூரைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கும் படி முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.

முதலாவதாக, சிங்கப்பூருக்கு சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினை, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றார். முதல்வர் மாலையில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்து கொள்ள உள்ளார்.

தற்போது தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருகிறார். டெமாசெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தில்கன் பிள்ளை சந்திரசேகரா, செம்கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிம்யன் வோங்க், கேப்பிட்டல் லேன்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் தாஸ் குப்தா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்கும்படியும் மேலும், தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய வருமாறும் முதலமைச்சர் அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் வர்த்தகத் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இதற்குப் பிறகு ஜப்பானுக்குச் செல்லும் முதலமைச்சா், வழக்கமாக தமிழ்நாட்டில் இருந்து செல்லும் அரசுக் குழுக்கள் டோக்கியோ நகருக்கு மட்டுமே செல்லும் நிலையில், இந்த முறை முதலமைச்சர் இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் ஒசாகா நகருக்கும் செல்லவுள்ளார். தொழில்துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து தமிழ்நாட்டில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கவிருக்கிறார்.

இது தவிர, 200க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்து கொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதலமைச்சர் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com