சென்னை நகரப் பூங்காக்களை மேம்படுத்தும் பணிகள் தொடக்கம்!

சென்னை நகரப் பூங்காக்களை மேம்படுத்தும் பணிகள் தொடக்கம்!
Published on

சென்னை நகரின் பதினைந்து மண்டலங்களில் உள்ள 786 பூங்காக்கள் பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் மேம்படுத்தப்பட உள்ளன. அதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதன் தொடக்கமாக நாகேஸ்வரராவ் பூங்கா போன்ற முக்கியமான பூங்காக்களில் புதிய பெஞ்சுகள் போடுதல், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் நிறுவுதல் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

முன்னதாக, பூங்காக்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், ’நமக்கு நாம்’ திட்டத்தின் கீழ், மாநகராட்சிக்கு பல பரிந்துரைகள் கிடைத்துள்ளன. அந்த வகையில், நகரின் பல வார்டுகளில் உள்ள பூங்காக்களில் போதிய கழிப்பறைகள் இல்லை என மூத்த குடிமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பூங்காவின் பல பகுதிகளில் உள்ள பழைய உபகரணங்கள் பழுதடைந்து, குழந்தைகள் காயமடைவதால், சிறந்த தரமான விளையாட்டு உபகரணங்களை பூங்காக்களில் நிறுவ வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை நகரின் பதினைந்து மண்டலங்களில் உள்ள மொத்தம் 786 பூங்காக்களில், 584 பூங்காக்கள் தனியார் ஒப்பந்ததாரர்களாலும், 145 பூங்காக்கள் மாநகராட்சி ஊழியர்களாலும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், 57 பூங்காக்கள் உள்ளாட்சிகளில் குடியிருப்போர் நலச் சங்கங்களால் தத்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில்  104 சாலை மீடியன், 113 போக்குவரத்து தீவுகள் மற்றும் 163 சாலையோர பூங்காக்கள் அழகுபடுத்தப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், பூங்காக்களில் தேவைப்படும் கூடுதல் பெஞ்சுகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை இறுதி செய்ய 15 மண்டலங்களில் உள்ள மாநகராட்சி அதிகாரிகள் குடியிருப்போர் சங்கங்களுடன் கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர். இது தவிர, அனைத்து கவுன்சிலர்களும் உள்ளூர் வார்டு மேம்பாட்டு நிதியை தங்கள் வார்டுகளில் உள்ள பூங்காக்களுக்கு செலவிடத் தொடங்கி உள்ளனர். பல பூங்காக்களில் உடற்பயிற்சி உபகரணங்களும் நிறுவப்பட்டு உள்ளன. பூங்காக்களில் உள்ள கழிப்பறைகளை மேம்படுத்தும் பணிகள் ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com