பணியில் இருக்கும் போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் போகிறது. ஏதாவது பிரச்சனை என்றவுடன் நாம் பேசுவது போலீஸ் என்ன தூங்குகிறதா என்று தான். அப்படி குற்றசம்பவங்களை தடுக்கும் காவல்துறையினர் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக புதிதாக பதவியேற்ற சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக சந்தீப் ராய் ரத்தோர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துப் பணிகளில் ஈடுபடும் காவலர்கள் வேலை நேரத்தில் செல்போனை பயன்படுத்துவதால், கவனச் சிதறல் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கவனச் சிதறலால் பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுவதாகவும் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். எனவே, சட்டம் ஒழுங்கு, முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு , கோயில் மற்றும் திருவிழாக்களின் பாதுகாப்பு போன்ற பணிகளில் ஈடுபடும் காவலர்கள் கண்டிப்பாக செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற முக்கிய பணிகளில் ஈடுபடும் காவலர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருப்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இச்சமயங்களில் செல்போனை பயன்படுத்துவது பணிகளில் தொய்வை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஆணையாளர், போக்குவரத்து காவலர்களும் செல்போனை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். இதனை அனைத்து கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைத்து காவல் நிலைய தகவல் பலகையிலும் இதனை ஒட்டி காவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று சென்னை பெருநகர ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் வலியுறுத்தியுள்ளார்.