சென்னை மாநகராட்சியில் பெண்களுக்காக, நடமாடும் ஒப்பனை அறை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில், கழிவறை, முகம் பார்க்கும் கண்ணாடி, சானிட்டரி நாப்கின், கை கழுவும் திரவம், உடை மாற்றும் சிறு அறை, தாய்ப்பால் ஊட்டும் அறை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
பெண்கள் சாலைகளில் பாத்ரூம் போவதற்காக சிரமப்படுவதையொட்டி இந்த வாகனம் அறிமுகப்பட்டுள்ளது. இந்த வாகனம் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு மண்டலத்துக்கு தலா 1 வாகனம் என மொத்தம் 15 வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்காக தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியின் கீழ், ரூ.30.28 கோடி மதிப்பீட்டில் 74 காம்பாக்டர் வாகனங்கள் மற்றும் நிர்பயா திட்ட நிதியின் கீழ், ரூ.4.37 கோடி மதிப்பீட்டில் 18 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் நேரு இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.