

அமெரிக்காவின் பொருளாதார சூழல்கள், தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.தங்கம் இப்போது ஆபரணமாக மட்டுமன்றி, பங்குச்சந்தையில் ஒரு வர்த்தகப் பொருளாக மாறிவிட்டது. ஆன்லைன் டிரேடிங் மற்றும் பங்குச்சந்தையில் தங்கத்தின் மீதான வர்த்தகம் அதிகரிப்பதும் விலையேற்றத்திற்கு காரணமாக உள்ளது..
2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கம் சுமார் ₹7,500 எனத் தொடங்கியது. பிப்ரவரியில் பாதுகாப்பான முதலீட்டுத் தேவையால் ₹8,100-ஐ நெருங்கிய விலை, ஏப்ரலில் ₹8,570 எனப் படிப்படியாக உயர்ந்தது. மே மாதத்தில் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் நாணய மதிப்பு சரிவு காரணமாக ₹9,000 என்ற மைல்கல்லை எட்டியது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த வர்த்தகப் போர் இந்த சமயத்தில் உச்சமடைந்ததே இந்த விலை உயர்விற்குக் மிக முக்கியக் காரணமாக அமைந்தது.
ஆண்டின் இரண்டாம் பாதியில் தங்கம் மீதான முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருகின. செப்டம்பரில் மீண்டும் வெடித்த வர்த்தகப் போரால் ஏற்பட்ட உலகளாவிய நிச்சயமற்ற தன்மையால், ஒரு கிராம் தங்கம் ₹10,595 ஆக உயர்ந்தது. அக்டோபர் மாதத்தில் இதே நிலை நீடிக்க, விலை ₹11,900-ஐக் கடந்து 2025-இன் மிகக் கூர்மையான உயர்வைப் பதிவு செய்தது. நவம்பர் மாதத்தில் மேலும் உயர்ந்து ₹12,300 என்ற நிலையை அடைந்தது.
2025-ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு கிராம் தங்கம் கிட்டத்தட்ட ₹13,400-ஐ எட்டி, கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்தது. இதன் மூலம், ஜனவரியில் ஒரு கிராம் தங்கத்தை ₹7,500-க்கு வாங்கிய முதலீட்டாளருக்கு, டிசம்பர் இறுதியில் ஒரு கிராமுக்கு ₹5,900 லாபம் கிடைத்தது. இது சுமார் 78 சதவீத வருமானத்தை (Return on Investment) ஈட்டித் தந்து, முதலீட்டாளர்களுக்கு ஒரு பொற்கால ஆண்டாக அமைந்தது.
இன்றைய தினத்தின் தொடக்கத்திலேயே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்தது. காலையில் தங்கம் சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 1,04,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்த நிலையில், ஒரு கிராம் தங்கம் 13,000 ரூபாயைத் தொட்டது. இதேபோல் வெள்ளியின் விலையும் காலை நேர வர்த்தகத்தில் கிலோவிற்கு 20,000 ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ 2,74,000 ரூபாயாகவும், ஒரு கிராம் 274 ரூபாயாகவும் விற்பனையானது.
மாலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் ஒரு உச்சத்தை எட்டியது. தங்கம் சவரனுக்கு மீண்டும் 800 ரூபாய் உயர்ந்து 1,04,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு புதிய வரலாறு படைத்தது.