

சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம் திறப்பு விழாவின் போது குத்துவிளக்கு ஏற்றுவதற்காக மெழுகுவர்த்தி வழங்கப்பட்டதாகவும், அதனை தமிழ்நாடு வெற்றிக் கழகம் எம்.எல்.ஏ ஏற்க மறுத்ததாகவும் கூறப்படும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
என்ன நடந்தது?
சென்னை மேயர் பிரியா, சென்னை திருவிக நகர் எம்எல்ஏவான பல்லவியுடன் மாநகராட்சி பள்ளியின் புதிய கட்டட திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது தவெக எம்எல்ஏ பல்லவிக்கும், மேயர் பிரியாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
சென்னை மாநகராட்சி பள்ளி திறப்பு விழாவில், மேயர் பிரியா தவெக எம்எல்ஏ பல்லவியை குத்துவிளக்கேற்ற அனுமதிக்காமல் விளக்கேற்றத் தேவையான மெழுகுவர்த்தியை கொடுக்க மறுத்ததாகவும் இதனால் தான் அவமதிக்கப்பட்டதாகக் கூறி கைக்குழந்தையுடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த எம்எல்ஏ பல்லவி கடும் கோபத்துடன் பாதியிலேயே வெளியேறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
முதலில் மேயர் பிரியா மெழுகுவர்த்தியை பயன்படுத்தி குத்துவிளக்கேற்றினார். அதன்பிறகு குத்துவிளக்கு ஏற்றுவதற்கான மெழுதுவர்த்தியை, தவெக எம்எல்ஏ பல்லவி கேட்டார். ஆனால் மேயர் பிரியா அவரிடம் கொடுக்காமல் ஐஏஎஸ் அதிகாரியான மாநகராட்சியின் இணை ஆணையர் கற்பகத்திடம் வழங்கி குத்துவிளக்கு ஏற்றும்படி கூறினார். இதனால் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்து கோபமடைந்த தவெக எம்எல்ஏ பல்லவி அங்கிருந்து வெளியேறினார்.
மாநகராட்சி பள்ளி கட்டிடம் என்பதால் திறக்க வேண்டிய அதிகாரம் மேயரிடம் மட்டுமே உண்டு .எனவும் எம்எல்ஏ , அமைச்சர் , கலெக்டர் ஆனாலும் உடன் நிற்கலாம் தவிர மேயர் அனுமதித்தால் மட்டுமே ரிப்பன் வெட்டுவது விளக்கு ஏற்றுவது ஆகியவைகளில் பங்கு பெற முடியும் என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்த நிலையில் இரு கட்சிகளைச் சேர்ந்த மதிப்பான மக்கள் பணியில் உள்ள பெண்கள் இருவரின் செயல்களும் இணையதளங்களில் வைரலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
உள்ளே ஏதேனும்.விழா நடந்தாலும், இருவேறு விதமான செய்திக் காணொளிகள் வெளிவந்த நிலையில் மக்கள் இது குறித்து இப்படியும் அரசு நிகழ்வுகள் நடக்குமா எனும் அதிருப்தியில் உள்ளனர். இதில் உள்ள உண்மை என்ன என்பதை அங்கிருந்தவர்கள் மட்டுமே அறிய முடியும் எனும் சூழலில் இந்த சம்பவம் குறித்து எம்எல்ஏ பல்லவி தனது கண்டனத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் மேயர் பிரியா மீது ஏற்கனவே பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகிறது.