திடீர் மழையால் ஓரே இரவில் முடங்கிய சென்னை!

திடீர் மழையால்  ஓரே இரவில் முடங்கிய சென்னை!

யல்பான சென்னை என்பது இதுதான். ஒரே இரவில் பெய்த மழையால் சென்னையின் பெரும்பாலான தெருக்களில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. மழை நீர் தேங்குவதை தடுக்க நிரந்தர நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் இருப்பதுதான் காரணம் என்கிறார்கள், சென்னை வாசிகள்.

சென்னை மாநகரம் நேற்றிரவு பெய்த இடி, மின்னலுடன் கூடிய மழையால் திணறிப்போனது. நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் முக்கிய சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. சென்னை போட் கிளப்பில் மழை நீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பால் அந்தப் பகுதியின் தெருக்களில் வெள்ள நீர் தேங்கியது.

சென்னை மாநகரம் முழுவதுமே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. வட சென்னை, தென் சென்னை என அனைத்து இடங்களிலும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பெரம்பூர், புளியந்தோப்பு, பட்டாளம், வேப்பேரி, கோயம்பேடு, கிண்டி கத்திபாரா, ஓ.எம்.ஆர்., திருமங்கலம், தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்திருக்கின்றன.

கத்திபாரா முதல் ஈக்காட்டு தாங்கல் வரையிலான பிரதான சாலையில் கூட மழைநீர் தேங்கியிருந்தது. ஒருநாள் மழைக்கே பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். பருவ மழைக்காலத்தில் கூட இந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாத சென்னை மாநகரத்தில், ஒரே இரவில் பெய்த மழையால் சென்னை தண்ணீரில் தத்தளிக்க என்னதான் காரணம் என்று கேள்வி எழுகிறது.

சென்னை மாநகரம் ஓரிரவு மழைக்கு  நிச்சயமாக திணறும். பருவமழைக்காலங்களில் தொடர் மழைப்பொழிவுகளை சமாளிக்க சென்னை மாநகராட்சி தயாராகவே இருந்த காரணத்தால் மட்டுமே பருவமழையின்போது சென்னையில் மழை பாதிப்புகளை குறைக்க முடிந்தது. பல லட்சம் செலவு செய்து மோட்டார்களை கொண்டு வந்து, மழை நீரை இரவு பகலாக தண்ணீரை இறைக்க வேண்டியிருந்தது.

தண்ணீர் தேங்கி நின்ற பகுதிகளுக்கு மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனே சென்று பணிகளை மேற்கொள்ள பருவழைக்காலத்தில் தயாராக இருந்தார்கள். தற்போது ஒரே இரவில் பெய்த திடீர் மழையை சென்னை மாநகர அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை. தற்போது 163 இடங்களில் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

சென்னையில் கனமழை காரணமாக உயிரிழப்புகள், வீடு மற்றும் பொருட்கள் சேதம் ஏதும் இல்லை. சென்னையில் மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்றும் தொடர்பான புகார்களுக்கு 04445674567 என்னும் எண்ணை தொடர்பு கொள்ளலாம். குடிநீர் வாரியத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 மூலமாகவும் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com