ஆன்லைன் மூலமாக போதைப் பொருள் விற்பனை 10 பேர் கைது! சென்னை காவல்துறை அதிரடி!

ஆன்லைன் மூலமாக போதைப் பொருள் விற்பனை 10 பேர் கைது! சென்னை காவல்துறை  அதிரடி!
Published on

ஆன்லைன் மூலமாக போதைப் பொருள் விற்பனை செய்த கும்பலை சேர்ந்த 10 பேரை சென்னை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை எனும் போதைப் பொருளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை என காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் எவ்வாறு சிக்கியது என்பது குறித்து சென்னை காவல்துறை தீவிர விசாரணையில் களம் இறங்கியுள்ளது.

சென்னை பூக்கடை துணை ஆணையர் உத்தரவின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரை காவல்துறையினர் தீவிர வாகன சோதனை ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு வாகன சோதனையில் ஈடுபடும்போது அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனங்களில் அடிக்கடி சந்தேகத்திற்கு இடமாக சுற்றி வரும் வாலிபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அவர்கள் கல்லூரி மாணவர்கள் என தெரிய வந்தது. அந்த கல்லூரி மாணவர்களிடமிருந்து 3 கிராம் மெத்தப்டமைன் போதை பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பூக்கடை துணை ஆணையர் உத்தரவில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் எவ்வாறு விநியோகிக்கப்படிகிறது என்பது குறித்து விசாரணையை தொடங்கினர். இப்படிப்பட்ட கல்லூரி மாணவர்களான சல்மான் ஷாகிர், சாய் சஞ்சய், முகமது நவ்ஃபிக் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் , சினிமாத் துறையைச் சேர்ந்த வளசரவாக்கத்தில் வசிக்கும் ஸியாத் என்பவர் மூலம் கிடைத்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

இரவு நேர பப்புகளில் கிடைத்த நட்பின் மூலம் இவர்கள் போதை பொருளை கைமாற்றிக் கொண்டது விசாரணையில் தெரியவந்தது. நண்பர்கள் ஒன்று கூடி பணம் சேர்த்து வைத்து போதைப் பொருள் வாங்கி கூட்டாக போதை மயக்கத்திற்கு உள்ளாவதை வழக்கமாகக் கொண்டதும் தெரியவந்துள்ளது.

இதற்கான உபகரணத்தை ஆன்லைன் மூலமாக வாங்கி பயன்படுத்துவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த உபகரணத்தில் தண்ணீரையும், போதைப் பொருளையும் ஆவியாக்கி அந்தப் புகையை சுவாசிப்பதன் மூலம் 8 மணி நேரம் தூக்கம் இல்லாமல், வேலை செய்யும் அலுப்பு தெரியாமல் போதையில் இருக்கலாம் என பகீர் தகவல்களை கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

விசாரணையில் வியாசர்பாடியில் பர்கத் அலி என்பவர் வீட்டிலும் ஒரு கிராம் மெத்தப்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறாக நீண்ட நாட்களாக போதை பொருள் விற்பனை செய்து கார் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கப்பட்டதையும் போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். யார் மூலம் போதை

பொருள் கை மாறுகிறது என்ற தொடர்பை விசாரித்த போலீசார்,நிசார், நவீன்,சேக் அப்துல்லா,அனீப் முகமது என்ற நான்கு பேரையும் கைது செய்தனர். 17ஆம் தேதி வாகன சோதனையில் சிக்கிய கல்லூரி மாணவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் 10 நாட்களில் 10 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.விரைவில் போதை பொருள் கும்பல் தலைவனை கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com