ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளைஞர் பிரைடுரிச் வின்சென்ட். 23 வயதாகும் இவர், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வதற்காக, இலங்கை வழியே சென்னை விமான நிலையத்துக்கு கடந்த 24ம் தேதி வந்து இருக்கிறார். அவர் திடீரென சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர், தான் சென்ட்ரலில் இருந்து கால் டாக்சி மூலம் வளசரவாக்கத்தில் இருக்கும் தங்கும் விடுதிக்கு வந்ததாகவும், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி தனது கையில் வைத்திருந்த லேப்டாப் மற்றும் இரண்டு பைகளை பறித்துக் கொண்டு சென்றுவிட்டதாகப் புகார் தெரிவித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் அந்த இளைஞர் வந்த ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோது, ‘அந்த ஜெர்மன் இளைஞர் திருவல்லிக்கேணியில் தனது ஆட்டோவில் ஏறியபோது அவர் கையில் லேப்டாப் மற்றும் பை உள்ளிட்ட எந்தப் பொருளும் இல்லை’ என்று கூறி இருக்கிறார். அதைத் தொடர்ந்து போலீசார் திருவல்லிக்கேணிக்குச் சென்று விசாரணை செய்ததில், இளைஞர் திருவல்லிக்கேணியில் இருக்கும் ஒரு லாட்ஜில் தங்கி இருந்ததும், அவருக்குச் சொந்தமான லேப்டாப் மற்றும் இரண்டு பைகளையும் அங்கேயே வைத்துவிட்டு வேண்டுமென்றே காவல் நிலையத்தில் பொய்யான புகார் கொடுத்திருப்பதும் தெரியவந்தது.
இது சம்பந்தமாக, அந்த ஜெர்மன் இளைஞரிடம் விசாரித்தபோது அவர் ரொம்பவும் கூலாக, ‘ஜஸ்ட் ஃபன்’ என்று கூறி இருக்கிறார். இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த ஜெர்மனி இளைஞர் வின்சென்ட்டை கடுமையாக எச்சரித்து இருக்கின்றனர். மேலும், இந்தத் தகவலை ஜெர்மனி தூதரகத்துக்கும் தெரிவித்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெர்மன் தூதரக அதிகாரிகள், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறி இருக்கின்றனர்.
அதன் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவின்படி ஜெர்மனி இளைஞர் வின்சென்ட் மீது பொய் புகார் அளித்தல் பிரிவின் கீழ் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் இவருக்கு ஒரு நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. மேலும், ஜெர்மனி தூதரக அதிகாரிகள் தங்களது சொந்த நாட்டுக்கு அவரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டதன்பேரில், தூதரகம் மூலம் அந்த இளைஞரை அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.