இன்ஸ்டாகிராமில் இதுபோன்ற வீடியோக்களை அப்லோடு செய்து மக்களுக்கு தவறான விழிப்புணர்வை ஏற்படுத்துவது குற்றச்செயல் என்றும், ஆகையால் இத்தகைய ரீல்ஸ்களை அப்ளோடு செய்யக்கூடாது என்றும் சென்னை போலீஸ் கமிஷ்னர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களை பொதுமக்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தவும், அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளவும் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் மிகவும் பிரபலம். ஆனால், இந்த ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்குவதில் சிலர் எல்லை மீறி செயல்படுவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக, சவால்களின் பெயரிலும், நகைச்சுவைக்காகவும் ஆபத்தான இடங்கள், வாகனங்கள் அல்லது பொது இடங்களில் சாகசங்கள் செய்வது போன்ற வீடியோக்கள் வெளியாவது அதிகரித்துள்ளது. மேலும் பெண்கள் குழந்தைகள் தொடர்பான வீடியோக்களும் கவலை அளிக்கும் விதமாக பதிவிறக்கம் செய்யப்படுகிறது. இது பொதுமக்களுக்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. மேலும், சிலர் போதைப்பொருட்களை உபயோகிப்பது, ஆயுதங்களை காட்சிப்படுத்துவது போன்ற சட்டவிரோத செயல்களையும் ரீல்ஸ் வீடியோக்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இப்படி சமூக வலைத்தளங்களில் வன்முறை மற்றும் குற்றச் செயல்களைத் தூண்டும் வகையில் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாவது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இத்தகைய வீடியோக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை காவல்துறைக்கு வலுத்துள்ளது.
இதனை அடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், விரைவில் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த கடிதத்தில், வன்முறை மற்றும் குற்றங்களை ஊக்குவிக்கும் வீடியோக்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட உள்ளது.
மேலும், காவல் ஆணையர் அருண், "வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்கள் அல்லது பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஊக்குவிக்கும் வீடியோக்கள் இனிமேல் யாராவது வெளியிட்டால், அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எந்தத் தளர்வும் காட்டப்படாது. சமூக வலைத்தளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்" என்று எச்சரித்துள்ளார்.
இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பரவிவரும் எதிர்மறை விளைவுகளை கட்டுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.