சென்னையில் கண்டக்டர் இல்லாத பஸ் அறிமுகம்..! எந்த பகுதியில் இயக்கம் தெரியுமா..?

Chennai Rolls Out Gold Electric AC Service
Chennai Rolls Out Gold Electric AC ServiceSource:superchennai
Published on

சிங்கப்பூர் சென்று வந்தவர்கள் அங்கு இயக்கப்படும் கண்டக்டர் இல்லாத சொகுசு பேருந்துகள் பற்றி பெருமையாக சொல்வார்கள். இனி நாமும், 'எங்கள் சென்னையிலும் உண்டு சிங்கப்பூர், லண்டன் தரத்தில்!' எனப் பெருமிதமாகச் சொல்லலாம். இதோ, சென்னைக்கும் வந்தாச்சு அந்த நவீன வசதி!"

தமிழக அரசின் போக்குவரத்து துறை பயணிகளை கவரும் வகையில் புதிய வசதிகள் கொண்ட டெக்னாலஜி பேருந்துகளை மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக சுற்றுச்சூழலை காக்க மின்சாரப் பேருந்துகளுக்கு தமிழக அரசு பெரும் முக்கியத்துவம் அளித்து சென்னையில் தற்போது 625 மின்சாரப் பேருந்துகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.அந்த வகையில் சொகுசு பேருந்து வரலாற்றில் மேலும் ஒரு மைல்கல் சர்வீசாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் (MTC) மூலம், நவீன வசதிகளுடன் கூடிய ஜொலிக்கும் தங்க நிறத்திலான பிரீமியம் குளிரூட்டப்பட்ட (AC) பேருந்துச் சேவையை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் தங்கரதம் என பெயரிடப்பட்ட கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய தாழ்தள மின்சார குளிர்சாதன சேவையை சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மத்திய மின்சாரப் பேருந்து பணிமனையில் காணொலி காட்சி வாயிலாக கடந்த வாரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக இந்த தங்கரத பேருந்து சேவை சென்னையின் முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் 40 கிலோ மீட்டர் வரை கொண்ட வழித்தடங்களில் 5 பிரீமியம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக இந்த பேருந்து சேவை வழித்தடம் 570 S மற்றும் 91 ஆகிய இரண்டு ரூட்களில் சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளன. 570 S வழித்தடம் சென்னை கோயம்பேடு முதல் சிறுசேரி ஐடி பார்க் வரையிலும் 91 வழித்தடம் திருவான்மியூர் முதல் தாம்பரம் வரையிலும் இயக்கப்படுவதாக தகவல்கள் கூறுகிறது. ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ள ஓம்ஆர் வழியே இந்த இரண்டு வழித்தடமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. .

இந்த 'தங்க ரத' பேருந்துகள் லண்டன்/சிங்கப்பூர் பாணியில், கண்டக்டர் இல்லாமல் இயங்கும் என்பது சிறப்பு. முழுமையான ஏசியுடன் சொகுசான இருக்கைகள், தாழ்தள வசதி (Low Floor), பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள், அவசரகால பொத்தான்கள், இலவச வைஃபை, USB மொபைல் சார்ஜிங் போர்ட்கள், பயணிகள் கவனத்திற்கு டிஜிட்டல் வழித்தடப் பலகைகள்.போன்ற பயணிகளை கவரும் வசதிகளுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கூடுதல் வசதிகளும் வழங்கப்படுவது சிறப்பு.

இதற்கான அனுமதிச் சீட்டுகளை சென்னை ஒன் ஆப் (Chennai one app) செயலி மூலமாக மட்டுமே பெறமுடியும். ஆரம்பக் கட்டணம் ரூபாய் 50 லிருந்து துவங்கி ரூபாய் 150 வரை தொலைவுக்கேற்ப அதிகபட்சமாக பெறப்படுகிறது. குறிப்பாக தற்போது தனிநபர் கார்களில் செல்வதால் பெருகிய போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக அவர்கள் காரில் பயணிப்பது போன்ற உணர்வுடன் சொகுசு பேருந்து பயணத்திற்கு மாறுவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது எனலாம்.

அரசு பஸ் என்றாலே கிழிந்த சீட்டுகள், கர்புர் என இழுவை சத்தம், அடிக்கடி ஸ்டாப் களில் நிற்கும் நேரம் என்ற கடுப்பான உணர்வுடன் பயணிக்கும் சென்னை மக்கள் இனி பரவச உணர்வுடன் தங்கரதத்தில் நிம்மதியாக பயணிக்கலாம். இந்த தங்கரதம் பேருந்து சேவை வெற்றிகரமாக இயங்குமா என்றும் மற்ற மாவட்டங்களுக்கும் இந்த சேவை வருமா என்றும் எதிர்பார்ப்பில் உள்ளனர் மக்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com