சென்னையில் புறநகர் மின்சார ரெயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்ட்ரல் - அரக்கோணம், சூலுார்பேட்டை, வேளச்சேரி என, அனைத்து மின்சார ரெயில் தடத்திலும், ஞாயிறு கால அட்டவணைப்படி, மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதேபோல மெட்ரோ ரயில்களும் இன்று(ஆக. 15) ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று நாட்டின் 79வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அரசு விடுமுறை என்பதால், மெட்ரோ ரயிலில் பயணம் செயபவர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் இன்று ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சுதந்திர தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேர இடைவெளிகள் பின்வருமாறு:
நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணிவரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.