சென்னையை மகிழ்விக்கும் ‘நம்ம ஊரு’ திருவிழா!

சென்னையை மகிழ்விக்கும்
‘நம்ம ஊரு’ திருவிழா!

மிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை முழுவதும் தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சார்பாக, ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி 13.01.2023 முதல் 17.01.2023 வரை நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலைகள் அனைத்தையும் தலைநகர் சென்னையில் சங்கமிக்கும் விதமாக, சென்னையின் பதினாறு இடங்களைத் தேர்ந்தெடுத்து, 600க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை தீவுத்திடலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவை 13.01.2023 அன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சிகள் சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. தினமும் மாலை 6 மணி முதல் இரவு ஒன்பது மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் போன்றவற்றோடு, இந்திய மாநிலங்களின் பல்வேறு கலைகளும் இதில் இடம்பெற்று வருகின்றன.

இந்தத் திருவிழாவில் நமது பாரம்பரிய உணவு வகைகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக உணவுத் திருவிழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதோடு, இந்த நிகழ்ச்சிகளைக் காண வரும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, அவசர மருத்துவ உதவி போன்ற வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளது.

நேற்று 15.01.2023 அன்று சென்னை, வளசரவாக்கம் ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள கலைஞர் பூங்காவில் நடைபெற்ற சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக மதுரை அலங்காநல்லூர் சமர் கலைக்குழுவினரின் தப்பாட்டம் நிகழ்ச்சியோடு அன்றைய கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. அதைத் தொடர்ந்து, பஞ்சாப் பாங்கரா நடனம், கள்ளக்குறிச்சி ஜெயராஜ் குழுவினரின் நையாண்டி மேளம், காவடியாட்டம், புரவியாட்டம், கிருஷ்ணகிரி முத்துமாரியம்மன் குழுவினரின் சேவையாட்டம், திருப்பத்தூர் குழுவினரின் பம்பை கைசிலம்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியைக் காண மாலை 5 மணி முதலே வயது வித்தியாசமின்றி குழுமிய மக்கள் கூட்டம், இரவு 9 மணிக்கு நிகழ்ச்சி முடியும் வரை ரசித்துப் பார்த்து கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதோடு, கிராமியக் கலைகள் இன்னும் அழியவில்லை, உயிர்ப்புடன்தான் உள்ளது என்பதையும் உணர்த்தியது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வந்த சிறப்பு நிகழ்ச்சிகளையும் தவிர்த்துவிட்டு, இதுபோன்ற கலைநிகழ்ச்சிகளைக் காண மக்கள் பெரும் ஆர்வம் காட்டியது ஒரு நல்லுதாரணம் என்றே கூற வேண்டும்.

நமது முன்னோர்கள் கொண்டாடி மகிழ்ந்த இந்த பழைமையும் பெருமையும் வாய்ந்த கலைகள் இன்று ஒருசில கிராமங்களில் மிகவும் சொற்பமான அளவில் மட்டுமே நடத்திக் காட்டப்பட்டு வருகின்றன. அதனால் இந்தக் கலைகள் இன்று ஏறக்குறைய அழியும் தருவாயில் இருப்பதோடு, அந்தக் கலைஞர்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் சிதைவுறும் நிலையில் உள்ளது. அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியும் புது வாழ்வும் தரும் விதமாக இதுபோன்ற கலைகளை நடத்துவது பாராட்ட வேண்டிய விஷயம் என்றே தோன்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com