இட ஒதுக்கீடே இல்லாத சத்தீஸ்கர் மாநிலம்

வெளிமாநிலச் செய்திகள்
இட ஒதுக்கீடே இல்லாத சத்தீஸ்கர் மாநிலம்

“பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில் நாடு முழுவதும் அதுபற்றி விவாதிக்கப்படுகிறது... விமர்சிக்கப்படுகிறது... இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஒரு மாநிலத்தில் எந்த ஒரு பிரிவினருக்கும் இட ஒத்துக்கீடு செய்யப்படவில்லை என்ற செய்தி ஆச்சரியமளிக்கிறது. அந்த மாநிலம் சட்டிஸ்கர்.

இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாததால், இன்ஜினீயரிங், பாலிடெக்னிக், ஆசிரியர் படிப்பு, தோட்டக்கலை, வேளாண்மை உள்ளிட்ட பல படிப்புகளில் கவுன்சிலிங் மற்றும் சேர்க்கை பணிகள் முடங்கியுள்ளன.

மாநிலத்தில் பொறியியல், பாலிடெக்னிக், எம்.சி.ஏ., போன்ற தொழில்நுட்ப படிப்புகளுக்கு சுமார் 23 ஆயிரம் இடங்களும், பி.எட்.க்கு 14 ஆயிரம் இடங்களும், டி.எல்.எட்.க்கு சுமார் 7 ஆயிரம் இடங்களும், விவசாயம் மற்றும் தோட்டக்கலைத் துறைக்கு சுமார் 2500 இடங்களும் உள்ளன.

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய ஆட்சேர்ப்பு மற்றும் தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. 12 ஆயிரம் ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்ட பல பணியிடங்களுக்கான அறிவிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

சுமார் ஆயிரம் காலி பணியிடங்களுக்கு நவம்பர் 6-ம் தேதி நடைபெற இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

பியூன் பணிக்கான 2.5 லட்சம் பேரின் தேர்வு முடிவு வெளியிடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஏன் இந்த விசித்திரமான நிலை?

நாட்டிலேயே மிக அதிகமாக 82 சதவிகித இடஒதுக்கீடு முறையை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநில அரசு அமல்படுத்தியது. ஆனால் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் இதற்கு தடை விதித்தது.

இதற்குப் பிறகு இந்த ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்,பழைய இட ஒதுக்கீடு முறையும் 'அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது' என்று கூறி அதையும் ரத்து செய்தது.

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்தில், ரமண் சிங் அரசு 2012 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு சட்டம் 1994 இன் பிரிவு 4 ஐ திருத்தியதின் மூலம் பொருளாதார பின் தங்கிய பிரிவினரையும் சேர்த்து எல்லாப்பிரிவினருக்குமான மொத்த ஒதுக்கிடு 82 % ஆக உயர்ந்தது.

இந்த இடஒதுக்கீட்டு முறையை எதிர்த்து சில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பலர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

பூபேஷ் பகேலின்
பூபேஷ் பகேலின்

இடஒதுக்கீடு கோரி பழங்குடியினர் பகுதிகளில் தினமும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் மறியல் போராட்டம், சில இடங்களில் தர்ணா நடக்கிறது. வேறு சில இடங்களில் முதல்வர் பூபேஷ் பகேலின் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது.

சில நாள்களில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் நடைபெற்றது. சில இடங்களில் ரயில் போக்குவரத்தை நிறுத்தும் முயற்சியும் நடந்தது.

இம்மாதிரி உச்ச நீதிமன்ற தீர்ப்புகளினால் நிர்வாக அமைப்பு பாதிக்கபடும்போது மாநில அரசு உடனடியாக ஒரு அவசர சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றி, சீராய்வு மனுதாக்கல் செய்து நிலைமையை சமாளிக்கும். இதை செய்யத்தான் சட்டிஸ்கர் அரசு தவறியிருக்கிறது.

சட்டிஸ்கர் மாநிலத்தில்தான் இந்தியாவிலேயே மிக அதிக சதவிகிதத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய மாநிலம். ஆனால், அந்த மாநிலத்தில்தான் இன்று “எந்தப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு இல்லை” என்ற நிலை எழுந்திருக்கிறது.

உடனடியாக மாநில அரசு “அவசரச் சட்டம் கொண்டுவந்து இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்” என்று எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கூறுகிறது.

இந்த நிலைக்கு பாரதிய ஜனதா கட்சியே காரணம் என்று அம்மாநில முதல்வர் பூபேஷ் பகேல் குற்றம் சாட்டுகிறார்.

"இது அவர்களது செயல்களால் ஏற்பட்ட நிலை. அதை நாங்கள் சரிசெய்ய முயற்சிக்கிறோம்" என்கிறார் முதல்வர் பூபேஷ் பகேல். இப்படி இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் அடுத்த ஆண்டு வரும் தேர்தல். இரண்டு கட்சிகளும் மாறி மாறி இடஒதுக்கிடு சலுகைகளை அறிவிக்கப்போகிறது. ஆனால், அதுவரை? இந்த நிலை தான் நீடிக்கப்போகிறதா என்பதுதான் எழுந்திருக்கும் கேள்வி

இந்த மாதிரி தேர்ல் வாக்குறுதிகள் அளிப்பதிலும் சில சிக்கல்கள் எழுகின்றது.

“உண்மையில் இடஒதுக்கீட்டின் சதவிகிதம் நிர்ணயிக்கப்படும்போது ஒரு பட்டியல் முறை உருவாக்கப்படுகிறது. யாருக்கு முதல் இடம், யாருக்கு இரண்டாவது, யாருக்கு மூன்றாவது என்று வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே இது பிரிக்கப்படுகிறது.

சத்தீஸ்கரில் 2012-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டு முறை மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசியல் கட்சிகள் இப்போது தடை செய்யப்பட்டிருக்கும் இட ஒதுக்கீட்டை “மீண்டும் கொண்டு வருவோம் என்றோ அல்லது ஒதுக்கீடுகளை அதிக சதவீதமாக மாற்றுவோம்” என்றோ அறிவிக்க முடியாது.

இதற்கிடையில் தங்கள் அரசின் இட ஒதுக்கீடு முறையை எதிர்த்த எதிர்கட்சித் தலைவரை அதை சீர் திருத்த அமைக்கப்பட்டிருக்கும் கமிட்டிக்கு தலைவராக நியமித்திருக்கிறார் முதலமைச்சர்.

பழங்குடியின இட ஒதுக்கீட்டை எதிர்த்த தலைவரான கே.பி.காண்டேவை, பட்டியல் சாதிகள் ஆணையத்தின் தலைவராக பூபேஷ் பகேலின் அரசு ஆக்கியிருக்கிறது. மறுபுறம், பூபேஷ் பகேல் அரசால் நடைமுறைப் படுத்தப்பட்ட இடஒதுக்கீடு முறையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த குணால் சுக்லாவையும் ஆராய்ச்சி பெஞ்ச் தலைவராக பூபேஷ் அரசு நியமித்தது. இந்த நியமனங்களால் இடஒதுக்கீடு விவகாரத்தில் பா.ஜ.க. கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், பஸ்தரின் பழங்குடியின தலைவருமான அரவிந்த் நேதம் தனது கட்சி அரசுக்கு எதிராகவே போர்கொடி தூக்கியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அரவிந்த் நேதம், சத்தீஸ்கரில் உள்ள எல்லா பழங்குடியின சமூகங்களின் பாதுகாவலராகவும் உள்ளார். இந்த அரசு பழங்குடியினரை அரசு வஞ்சிக்கிறது என்ற குரலை எழுப்பியிருக்கிறார்.

“சத்தீஸ்கரில் இடஒதுக்கீட்டின் அதிகபட்ச அளவு என்னவாக இருக்கும் அல்லது 2019இல் தான் கொண்டு வந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல் செய்யப்போகிறதா” என்பது மிகப்பெரிய கேள்வி.

பூபேஷ் பகேலின் அரசு, 2012-ல் பா.ஜ.க.வின் ரமண் சிங் அரசு அமல்படுத்திய இடஒதுக்கீட்டு கொள்கையை ஆதரிக்குமா அல்லது வேறு ஏதாவது வழி தேடுமா?

அம்மாநில மக்கள் காத்திருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com