சத்தீஸ்கர் முதல்வரான விஷ்ணு தியோசாய்... பின்னயில் மோடி, அமித்ஷாவின் துல்லியமான கணக்கு!

Chhattisgarh New CM Vishnu Deo Sai
Chhattisgarh New CM Vishnu Deo Sai
Published on

த்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சரும் பழங்குடியினர் தலைவருமான விஷ்ணு தேவ் சாய் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ரமன் சிங், முதல்வர் பதவிக்கு கடும் போட்டியாளராக இருந்த போதிலும் விஷ்ணு தேவ் சாயை பா.ஜ.க. முதல்வராக தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் மாநிலத்தின் வளர்ச்சியில் மட்டுமல்ல, அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார் என்று கருதப்படுகிறது.

விஷ்ணு தேவ் சாய், சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடியினர் பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். பழங்குடியின மக்களிடையே செல்வாக்கு மிகுந்தவர். சத்தீஸ்கர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 32 சதவீதம் பேர் பழங்குடியினர். அதாவது இந்தியாவின் பழங்குடியினர் மக்கள் தொகையில் 7.5 சதவீதம் பேர் இங்குதான் வசிக்கின்றனர்.

மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 23 தொகுதிகள் பழங்குடியினர் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, விஷ்ணு சாய், மிகவும் செல்வாக்கு மிகுந்த சாஹு (தெலி) சமூகத்தைச் சேர்ந்தவர். துர்க், ராய்பூர் மற்றும் விலாஸ்பூர் பகுதிகளில் கணிசமான அளவில் இச்சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.

விஷ்ணு தேவ் சாய், சத்தீஸ்கரின் வடக்கு பகுதியில் உள்ள சர்குஜா பிராந்தியத்தில் உள்ள ஜாஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சர்குஜா பிராந்தியத்தில் சர்குஜா, கொரியா, ராமானுஜ்கஞ்ச்-பல்ராம்பூர், சூரஜ்பூர், ஜாஷ்பூர் மற்றும் மகேந்திரகர்-சிர்மிரி-பரத்பூர் மாவட்டங்களை உள்ளடக்கியது.

இங்கு 14 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. பெரும்பாலான தேர்தலில் இங்குள்ள மக்கள் ஒரே மாதிரியாக தேர்தலில் வாக்களிப்பது வழக்கமாகும்.2003 ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 10 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸுக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்தது. 2008 –ல் பா.ஜ.க.வுக்கு 9, காங்கிரஸுக்கு 5. 2013 ஆம் ஆண்டில் பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டுக்கு தலா 7 இடங்கள் கிடைத்தன.

2018 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில், மக்கள் டி.எஸ்.சிங் தேவ், காங்கிரஸ் முதல்வராக நியமிக்கப்படுவார் என்று நினைத்து வாக்களித்தனர். அந்த தேர்தலில் 14 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றது. எனினும் பூபேஷ் பாகல் முதல்வராக நியமிக்கப்பட்டது இப்பகுதி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதாவது இந்த முறை அம்பிகாபூர் தொகுதியில் போட்டியிட்ட டி.எஸ்.சிங் தேவ், வெற்றிவாய்ப்பை இழந்தார்.

தேர்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா, விஷ்ணு தேவ் சாயை வெற்றி பெற வைக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டார். அவர் வெற்றிபெற்றால் அவருக்கு உரிய பதவி அளிக்க்ப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்த தேர்தலில் சர்குஜா பிராந்திய மக்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து 14 தொகுதிகளிலும் பா.ஜ.க. அமோக வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பா.ஜ.க. 54 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 35 இடங்களில் மட்டுமே வென்றது.

2018 ஆண்டு போலவே இந்த 14 தொகுதிகளும் காங்கிரஸ் பக்கம் சென்றிருந்தால் காங்கிரஸ் ஆட்சியமைத்திருக்கும். பா.ஜ.க.வுக்கு 14 இடங்கள் குறைவாகவே கிடைத்திருக்கும்.

இப்போது சத்தீஸ்கரில் ஒரு பழங்குடியினரை முதல்வராக்கியதன் மூலம், சர்குஜா மக்களின் ஆசையை பா.ஜ.க. நிறைவேற்றியுள்ளது. அதுமட்டுமல்ல பக்கத்து மாநிலங்களான மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட, ஒடிஸா மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களின் நம்பிக்கையை காங்கிரஸைவிட அதிகமாக பெற்றுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில் இந்த ஒப்பீடு மிக முக்கியமானது.

மேலும் அருண் சாவ் மற்றும் விஜய் சர்மா இருவரையும் துணை முதல்வராக தேர்வு செய்துள்ளதன் மூலம் பா.ஜ.க. ஓ.பி.சி. மற்றும் பிராமண வாக்காளர்களையும் திருப்தி செய்துள்ளது. ரமன்சிங், சட்டப்பேரவைத் தலைவராக தொடரும் நிலையில் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்பில்லை. மேலும் ரமன்சிங், ராஜபுதன வாக்காளர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com