
லண்டன் சுற்றுப்பயணம் முடிந்து நேற்று சென்னை திரும்பியதும் விமான நிலைய வளாகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அண்ணாமலை, சிதம்பர கனகசபை சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்து அரசியலாக்க விரும்பவில்லை என்றார். லண்டன் விசிட் பற்றி பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு கோபப்பட்டவர், பாஸ்போர்ட் சிஸ்டம், இமிக்ரேஷன் பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு வகுப்பு எடுத்தார்.
சிதம்பரம் கோயில் பிரச்னையை தீட்சிதர்களே பார்த்துக்கொள்வார்கள் என்று தெரிவித்த அண்ணாமலை, பிரச்னையை அரசியலாக்க விரும்பவில்லை என்றார். ஆனால், இன்று விரிவான அறிக்கையை வெளியிடவேண்டிய அவசியம் ஏன் என்று அரசியல் வட்டாரத்தில் கேள்விகள் எழுந்துள்ளன. சென்னை திரும்பியதும் பிரச்னை குறித்து முழுமையாக கேட்டறிந்தவர், அறிக்கையோடு நிறுத்தாமல் அறநிலையத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24ம்தேதி முதல் 27ம் தேதி வரையிலான நான்கு நாட்களில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று தீட்சிதர்கள் தரப்பில் அறிவிப்புப் பலகை ஒன்று வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவிப்புப் பலகையை நீக்கியதோடு கனகசபை உள்ளே சென்று தரிசனம் செய்து திரும்பி வந்தார்கள். ஆனி திருமஞ்சனம் முடிந்து நான்கு நாட்களுக்கு கனக சபைக்குள் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது காலம்காலமாக நடந்து வருவதுதான்.
ஒவ்வொரு ஆண்டும் ஆனி திருமஞ்சனம் காலத்தில் கனகசபைக்குள் செல்ல தீட்சிதர்கள் தரப்பு மறுப்பதும், அதை எதிர்த்து பக்தர்களுக்கு ஆதரவாக அறநிலையத்துறை செயல்படுவதும் ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது குறித்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பர நடராஜர் கோயிலின் நிர்வாக அதிகாரம் தீட்சிதர்களுக்கு இருப்பதாகவும் விளக்கி சொல்லப்பட்டிருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சிதம்பர நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தார்கள். நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நகைகள், தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தரப்பட்ட அழுத்தத்தினால் தீட்சிதர்கள் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். அதே நேரத்தில் கோயில் நிலங்களுக்கான தணிக்கை ஏன் செய்யப்படவில்லை என்று அறநிலையத்துறையை நோக்கி, தீட்சிதர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
சிதம்பரம் கோயிலுக்கு செந்தமான 3500 ஏக்கர் நிலத்தை பராமரித்து வரும் தமிழக அரசு, கடந்த 15 ஆண்டுகளாக நிலத்தின் மூலமாக வந்த வருவாய் கணக்குகளை தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் நிலத்தின் மூலம் இதுவரை பெறப்பட்ட வருவாயை சிதம்பர நடராஜர் திருக்கோயிலில் செலுத்தவேண்டும். இதுவரை செய்யப்படவில்லை என்பதுதான் சிதம்பரம் விஷயத்தில் பா.ஜ.க வட்டாரங்களை களத்தில் இறங்க வைத்திருக்கிறது.
இது குறித்து அறநிலையத்துறை விளக்கம் தரவேண்டும் என்பது அண்ணாமலையின் வாதம். இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களின் வருவாய் செலவினங்களை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். தமிழக அரசின் உள்ளாட்சி தலநிதி தணிக்கைத் துறையானது கோயில் கணக்குகள், சத்துணவுக் கூடங்களில் கணக்கு, நகராட்சி, மாநகராட்சிகளில் நிதி கணக்குகளை தணிக்கை செய்து வருகிறது. ஆள் பற்றாக்குறை, நேரமின்மை போன்ற காரணங்களால் சிறிய கோயில்களில் தணிக்கை செய்யப்படுவதில்லை. பழனி, ஸ்ரீரங்கம், சிதம்பரம் போன்ற முக்கியமான கோயில்களிலாவது முழுமையாக தணிக்கை செய்யப்படவேண்டும் என்கிற பக்தர்களின் கருத்தை பா.ஜ.கவும் ஆதரிக்கிறது.