சிதம்பரம் நடராஜர் கோயில் திடீர் அறிவிப்புக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு!

சிதம்பரம் நடராஜர் கோயில் திடீர் அறிவிப்புக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு!

புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆனி திருமஞ்சன வைபவத்தை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பு கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த நிலையில் நாளை காலை தேரோட்டமும் அதைத் தொடர்ந்து ஆனி திருமஞ்சன வைபவமும் நடைபெற உள்ளது. இந்த வைபவத்தில் மூலவர் நடராஜ பெருமானே தேருக்கு வந்து இந்த வைபவத்தில் கலந்து கொள்வது சிறப்பு.

இந்த வைபவத்தில் தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள்  லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனி திருமஞ்சன விழா கோலாகலமாக ஆரம்பமாகி இருக்கும் தற்போதைய சூழலில் பக்தர்கள் பலரும் நடராஜப் பெருமானை வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில், ‘இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு நடராஜர் கோயிலில் உள்ள கனக சபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை’ என்ற வாசகம் இடம்பெற்ற அறிவிப்புப் பலகை ஒன்றை கோயில் தீட்சிதர்கள் வைத்து இருக்கின்றனர். இது சம்பந்தமாக பக்தர்கள் சிலர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, அறநிலையத்துறை அதிகாரி சரண்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் காவல் துறையினர் அந்த அறிவிப்புப் பலகையை அகற்றும்படி தீட்சிதர்களிடம் கூறி இருக்கிறார். அதையடுத்து அரசு அலுவலர்களுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிதம்பரம் நடராஜர் கோயில் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.  

அதேபோல், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அருகே இருக்கும் சிவபுரி கிராமத்தைச் சேர்ந்த பக்தர் கார்வண்ணன் என்ற 61 வயது முதியவர், நடராஜர் கோயிலின் 21ம் படி அருகே நின்று சாமி தரிசனம் செய்துகொண்டிருந்தபோது கோயில் தீட்சிதர்கள் கனகசபாபதி மற்றும் வத்தன் ஆகியோர் அந்த முதியவரை தரக்குறைவாகப் பேசி கீழே தள்ளிவிட்டு இருக்கிறார்கள். இதுகுறித்து அந்த முதியவர் காவல் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து, அந்த இரண்டு தீட்சிதர்கள் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

தீட்சிதர்கள் தள்ளிவிட்டதில் காயம் அடைந்த அந்த முதியவர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘தீட்சிதர்கள், பக்தர்களின் சுயமரியாதைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அநாவசியமாக விரட்டுவது, எதேச்சதிகாரமாக நடந்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’ என்று கூறினார்.

ஏற்கெனவே குழந்தைத் திருமணம், சக தீட்சிதர்களிடையே சண்டை போன்ற பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், தற்போது சிவ பக்தரை தாக்கிய புகாரிலும் சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com