மணிப்பூரில் நடந்த வன்முறை வீடியோ நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் குரல் எழுப்பி வருகிறார்கள். மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் இணையத்தில் வைரலான வீடியோ எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரதமர் மோடி, மணிப்பூர் சம்பவம் குறித்து விரிவான விளக்கம் தரவேண்டும் என்று ஜோதிமணி உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் முன்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பிரதமர் மோ, மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது. இது தேசத்திற்கே அவமானம். இத்தகைய செயலை செய்தவர்கள் தப்ப முடியாது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மணிப்பூர் சம்பவம் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வெளிநாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், ஏதோ ஒன்றைத் திறப்பதற்காக செல்ல தயாராக இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி, மணிப்பூர் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை.
மணிப்பூர் பற்றி கவலைப்படுவதற்கு காரணமானது எது என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றத்தின் கொடூர வீடியோவை பார்த்த பின்னர்தான் மணிப்பூர் பற்றியே நினைக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் பிரதமர் செய்திருக்க வேண்டிய முதல் விஷயம், மணிப்பூர் அரசை கலைப்பதுதான்.
மணிப்பூரில் தொடர்ந்து வரும் வன்முறையை கட்டுப்படுத்த முடியாத பைரன்சிங் அரசை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பிய பின்னர் மற்ற மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.