சமீபத்தில் நடந்து முடிந்த ஆனி திருமஞ்சன விழாவையொட்டி கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை பக்தர்கள் யாரும் சிதம்பரம் கோயில் கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்யக் கூடாது என அக்கோயில் தீட்சிதர்கள் சார்பில் அறிவிப்புப் பதாகை ஒன்று வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பக்தர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சென்று புகார் செய்ததைத் தொடர்ந்து, அந்தப் பதாகையை அகற்றச் சென்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் கோயில் தீட்சிதர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து மறுநாள், சிதம்பரம் கோயிலில் வைக்கப்பட்டிருந்த அந்த அறிவிப்புப் பதாகையை அதிகாரிகள் அகற்றினர். அப்போது தீட்சிதர்கள் அதற்கு தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சார்பிலும் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்தப் புகார் மனுவில், ‘தங்கள் தரப்பு விளக்கதைக் கேட்காமல் கோயிலில் வைக்கப்பட்ட பதாகை முன்னறிவிப்பின்றி அறநிலையத்துறை பணியாளர்களால் அகற்றப்பட்டு இருக்கிறது. பதாகையை அகற்றிய இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டு உள்ளது. இந்தப் புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட போலீசாரும் உரிய விசாரணை நடத்தி அதன் பிறகு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பதாகக் கூறி உள்ளனர்.
இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழு ஒன்று சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்துப் பேசி உள்ளனர். இந்த சந்திப்பில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவராம தீட்சிதர் தலைமையில் மூன்று தீட்சிதர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். அப்போது, ஆனி திருமஞ்சன விழாவின்போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஏற்பட்ட கனகசபை சாமி தரிசனம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து அவர் கோயில் தீட்சிதர்களிடம் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.