கிருஷ்ணகிரி வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

கிருஷ்ணகிரி வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
Published on

கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோயில் அருகே உள்ள பட்டாசு குடோனில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. எதிர்பாராத இந்த வெடி விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் இறந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வெடி விபத்தின் காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என்று அஞ்சப்படுகிறது. வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு, காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல் துறையிர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டாசு குடோன் அருகில் இருக்கும் ஒரு ஹோட்டலில் சிலிண்டர் வெடித்ததே இந்த வெடி விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஹோட்டல் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் அருகில் இருந்த பட்டாசு குடோனில் தீப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம், மற்றும் வட்டம், பழையபேட்டை நகரம், நேதாஜி ரோடு, போகனப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கடையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியை அனுப்பி வைத்துள்ளேன். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com