

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், வனத்துறை களப்பணியாளர்களின் பயன்பாட்டுக்காக 2 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 மின்சார இரு சக்கர வாகனங்கள், 4 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பொலிரோ ஈப்புகள், வன உயிரின அரசர மீட்பு பணிகள் மற்றும் காயமுற்ற வன உயிரினங்களுக்கு அவசர சிகிச்சை அளித்திட 5 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் தனிச்சிறப்புடன் வடிவமைக்கப்பட்ட 35 மீட்பு மற்றும் மறுவாழ்வு வாகனங்கள் ஆகியவற்றை கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்.
தமிழக அரசு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் இணைந்து 920.52 கோடி ரூபாய் செலவில் இந்த காலநிலை மாற்றத்துக்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. உள்ளூர் மக்களின் பங்கெடுப்புடன் மேலாண்மை நடைமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் வனவிலங்கு வாழ்விடங்களை மேம்படுத்துவதோடு, கார்பன் சம நிலையை அடைவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு 104.10 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.
வனச் சுற்றுச்சூழலை பாதுகாக்க 2.42 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டிருக்கும் 200 மின்சார இரு சக்கர வாகனங்கள் முன்களப் பணியாளர்கள் தொலைதூர பகுதிகளைப் பார்வையிடவும், ரோந்து செல்லவும் பெரிதும் உதவும். அதேபோல், வனத்துறையின் கள மேலாண்மை பணிக்காக 4.63 கோடி ரூபாய் மதிப்பில் 50 பொலிரோ ஈப்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், வனப் படையை நவீனமயமாக்குவதற்காக 52.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. வன உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும், வன மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும், அதன் மனித வளத்தின் திறனை வளர்ப்பதற்கும் மற்றும் உட்புற மற்றும் தொலைதூர வனப்பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் இந்த நிதியைப் பயன்படுத்த வனத்துறை திட்டமிட்டு இருக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் 5.25 கோடி ரூபாய் செலவில் 35 வாகனங்களை வனவிலங்கு பிரிவு கொள்முதல் செய்துள்ளது. இந்த வாகனங்கள் வனவிலங்கு பகுதிகளில் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தனிச்சிறப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் 35 மாவட்டங்களில் பயன்படுத்தப்படும். இந்த வாகனங்கள் முன்களப் பணியாளர்களை மனித வனவிலங்கு மோதல் பகுதிகள் மற்றும் காட்டுத்தீ பரவும் இடங்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், சிறுத்தைகள், புலிகள் மற்றும் சிறிய விலங்குகளுக்கான பொறி கூண்டுகள், வலைகள் மற்றும் தீயணைப்பு உபகரணங்களைக் கொண்டு செல்ல ஏதுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்திலும் விலங்கு மீட்புக்கு உதவும் வகையில் வாகனங்களில் தேடல் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. வாகனங்களில் புவியிடங்காட்டி (GPS) மற்றும் ஒலிபெருக்கி கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கிய விலங்குகளை மீட்க இந்த வாகனத்தில் 6 டன் வின்ச் பொருத்தப்பட்டுள்ளது. காயமுற்ற காட்டு விலங்குகளை மீட்க இந்த வாகனங்கள் பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுப்ரத் மஹாபத்ர, தலைமை வன உயிரினக் காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ரா.ரெட்டி, தலைமை திட்ட இயக்குநர் இ.அன்வர்தீன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.