கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

துரை, புதுநத்தம் சாலை டிஆர்ஓ காலனி அருகில் பிரம்மாண்டமாக 215 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ளது கலைஞர் நூற்றாண்டு நூலகம். இந்த நூலகத் திறப்பு விழா நாளை மாலை நடைபெற உள்ளது. நூலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த விழாவில் திமுகவினரை விட, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சுமார் 15,000க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு கவனிக்கிறார். நூலகத் திறப்பு விழாவுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

நாளை மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்து பார்வையிடுகிறார். அதன் பிறகு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நூலக வடிவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்வர் பேச உள்ளார். இந்த விழா முடிந்ததும் மதுரை கோச்சடை பகுதியில் இருக்கும் மறைந்த கருமுத்து கண்ணன் வீட்டுச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, மீண்டும் சென்னை திரும்ப உள்ளார் முதல்வர்.

முதல்வரின் மதுரை வருகையையொட்டி பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதற்காக மதுரை விமான நிலையம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஆயுதப்படை மைதானம் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் மூவாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தமிழக முதல்வரின் மதுரை வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் மற்றும் மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். முதல்வரின் மதுரை வருகையையொட்டி மதுரையில் போக்குவரத்திலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com