

திமுக நடத்துவது குடும்ப அரசியல் என்று சமீபத்தில் பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘‘பிரதமர் மோடி, இரண்டு நாட்களுக்கு முன்பு நாம் குடும்ப அரசியல் நடத்திக் கொண்டிருப்பதாகக் கூறி இருக்கிறார். இது குடும்ப அரசியல்தான். அதை அவர் சொன்னதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அறிஞர் அண்ணா இந்த இயக்கத்தை தொடங்கிய நேரத்தில் அனைவரையும் ‘தம்பி… தம்பி’ என்றுதான் உரிமையோடு அழைத்தார். அதைத்தொடர்ந்து கலைஞர் அனைவரையும் ‘உடன்பிறப்பே… உடன்பிறப்பே…’ என்று அழைத்தார். எனவே, இது குடும்ப அரசியல்தான்.
திமுக சார்பில் பல மாநாடுகளை நடத்தி இருக்கிறோம். அந்த மாநாட்டுக்கு, ‘குடும்பம் குடும்பமாக வாருங்கள்’ என்றுதான் கலைஞர் அழைப்பார். அதன்படி குடும்பம் குடும்பமாக கைக்குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வந்து அந்த பந்தலிலேயே தொட்டில் கட்டி, குழந்தைகளைப் போட்டு ஆட்டும் காட்சிகளை கலைஞர் பார்த்துப் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். மாநாட்டுக்கு மட்டுமல்ல, போராட்டத்துக்குக்கூட குடும்பம் குடும்பமாக பங்கேற்று, சிறை சென்று பல கொடுமைகளை எல்லாம் அனுபவித்திருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தில் இருக்கும் வழக்கம்.
ஆனால், பிரதமர் மோடி, ‘தி.மு.க.வுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் குடும்பம்தான் வளர்ச்சி அடையும்’ என்று பேசியிருக்கிறார். ஆம், கருணாநிதியின் குடும்பம் என்பதே இந்த தமிழ்நாடுதான். தமிழர்கள்தான். 50 ஆண்டு காலமாக திராவிட இயக்கம்தான் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த 50 ஆண்டு காலத்தில் தமிழகம் அடைந்திருக்கும் வளர்ச்சிகளை பார்த்துவிட்டு, பிரதமர் பேச வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
குடும்பம் குடும்பம் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, ஒரு வருடம் மிசாவில் அடைக்கப்பட்டு சிறையில் இருந்த நேரம் அது. பொதுவாக, சிறையில் இருப்பவர்களை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் வந்து சந்திப்பது வழக்கம். ஆனால், சென்னை சிறைச்சாலையை பொறுத்தவரை இரண்டு மாத காலம் அதற்கு அனுமதி தரவில்லை. ஆனால், நியாயமாக, சட்டப்படி அனுமதி தந்தாக வேண்டும்.
அப்போது கலைஞர் ஒரு அறிக்கை வெளியிட்டார், ‘அனுமதி தரவில்லை என்றால் சிறையில் இருப்பவர்களின் உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறை வாசலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். அது என்னுடைய தலைமையில் நடைபெறும்’ என்று அறிவித்தார். அதற்குப் பிறகு எங்களை சந்திக்க அனுமதி தந்தார்கள். அப்படி முதல் அனுமதி கொடுத்தது எனக்குத்தான், கலைஞர் வந்து பார்க்க வேண்டும். ஆனால், அவர் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். ‘சிறையில் உள்ள மற்றவர்களை அவர்களது உறவினர்கள் பார்த்த பிறகுதான் என்னுடைய மகன் ஸ்டாலினை நான் பார்க்க வருவேன்’ என்று சொன்னார் கலைஞர். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், என்னை மட்டும் தனது மகனாகக் கருதவில்லை அவர், சிறையில் இருக்கும் அத்தனை பேரையும் மகனாகக் கருதியவர் கலைஞர். எனவே, குடும்ப அரசியல் என்று பொருத்தமாகத்தான் பிரதமர் மோடி சொல்லி இருக்கிறார்.
பிரதமருக்கு இப்பொழுது ஒரு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 23ம் தேதி பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பாட்னாவில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை ஒன்று திரட்டி, ஒரு தேர்தல் வியூகத்தை அமைக்க வேண்டும் என்பதைப் பற்றி கலந்து பேசிட முதல் கூட்டமாக அந்த முயற்சி எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு அவருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சம்தான், இன்றைக்கு பிரதமர் மோடி இப்படி இறங்கி வந்து பேசும் சூழலை உருவாகி இருக்கிறது. இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி. ஆளுகிற மாநிலம் மணிப்பூர். அந்த மாநிலம் கடந்த 50 நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது. 150 பேர் இதுவரை பலியாகியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இதுவரை பிரதமர் அந்தப் பக்கமே போகவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைகூட 50 நாட்களுக்குப் பிறகுதான் அமித் ஷா நடத்தி இருக்கிறார். இதுதான் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் லட்சணம். இந்த லட்சணத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று சொல்லி இருக்கிறார்.
ஒரு நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்கக் கூடாது என்கிறார் மோடி. மதப் பிரச்னையை அதிகமாக்கி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று அவர் கருதுகிறார். நிச்சயமாக வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சரியான பாடத்தை மக்கள் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள்’ என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.