‘மத்திய அரசின் அவரச சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும்’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

‘மத்திய அரசின் அவரச சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும்’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

லைநகர் டெல்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்தை நிராகரிக்க ஆதரவு கோரி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் இன்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அதன் பின்னர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “இன்று நானும் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்களைச் சந்தித்தோம். கடந்த எட்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்த சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் வென்றது. கடந்த 11ம் தேதி உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை டெல்லி மக்களுக்கு சாதகமாக வழங்கியது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு டெல்லியில் உள்ளது. எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, அரசை நடத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும் உள்ளன. ‘குடிமைப்பணி அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லாமல்போனால், அரசை நடத்துவது எளிது அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

இந்தத் தீர்ப்பு வந்த ஒரு வாரத்துக்குள் மே 19ம் தேதி உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்த நேரத்தில் பாஜக அரசு இரவு 10 மணிக்கு ஒரு அவசர சட்டத்தைப் பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இதுபோல நடப்பது இதுவே முதல்முறை. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் இருந்த அதிகாரங்களை ஆளுநருக்கு அளித்து அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது. இந்த அவசர சட்டம் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட இருக்கிறது. பாஜகவுக்கு மக்களவையில் போதுமான அளவு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், மாநிலங்களவையில் மொத்தமுள்ள 238 உறுப்பினர்களில் பாஜகவுக்கு 93 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பாஜக அல்லாத எதிர் கட்சியினர் அனைவரும் இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்தால், மாநிலங்களவையில் இந்த அவசர சட்டத்தை தோற்கடிக்க முடியும். எனவே, இதற்கு ஆதரவு கோரி தமிழக முதல்வரை இன்று சந்தித்தேன். கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்டு இருக்கும் இந்தச் சட்டம் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட வேண்டும். இந்தச் சட்டம் மாநிலங்களவையில் கொண்டுவரும்போது டெல்லியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு திமுக ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி.

கடந்த சில வாரங்களாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் சென்று பாஜக தவிர்த்த மற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரி வருகிறேன். அதற்கு அனைவரிடம் இருந்தும் எங்களுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. இது ஒவ்வொரு நாளும் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்து வருகிறது. நான் ஏற்கெனவே சொன்னது போல, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதிதான் இது. மத்திய அரசின் இந்த அவசர சட்டம் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டால், நாடு முழுவதும் ஒரு வலுவான செய்தி சென்றடையும். ஒருவேளை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் 2024ல் மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது" என்று அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து, ‘காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்திப்பீர்களா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், 'ராகுல் காந்தி மற்றும் கார்கேவை சந்திக்க நேரம் கேட்டு உள்ளேன். அவர்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன்" என்று அவர் கூறினார். அடுத்து, ‘நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை தோற்கடிக்க காங்கிரஸ் உதவும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?’ என்று கேட்டபோது, ‘காங்கிரஸ் கட்சி நிச்சயமாக ஆதரவளிக்கும் என்று நம்புகிறேன்’ என்று அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "டெல்லி மாநில அரசுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு நிறைவேறக் கூடாது என்ற எண்ணத்தோடு ஆளும் பாஜக அரசு ஓர் அவசர சட்டத்தை பிறப்பித்திருக்கிறது. இந்த அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது" என்று கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com