தொமுச என்று அழைக்கப்படும் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் பொன்விழா ஆண்டு இதுவாகும். திமுக சார்புடையதும் அந்தக் கட்சிக் கொள்கைகளை ஆதரிக்கும் இந்தத் தொழிற்சங்கத்தின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு இம்மாதம் 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் தொமுச பேரவையின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தப் பொன் விழா குறித்து, தொமுச பேரவையின் பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், “தொமுச பேரவையின் பொதுக்குழு வரும் 16, 17ம் தேதிகளிலும், பொன்விழா மாநாடு வரும் 18ம் தேதியும் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. அதன்படி, நாளை (மே 16) காலை கலைவாணர் அரங்கில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
நாளை பிற்பகலில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, பொதுக்குழுவைத் தொடங்கிவைத்துப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து, பேரவை பொதுச் செயலாளர் எம்.சண்முகம் எம்.பி. ஆண்டறிக்கையையும், பொருளாளர் கி.நடராசன் வரவு, செலவு கணக்கையும் தாக்கல் செய்கின்றனர்.
இரண்டாவது நாள் (மே 17) பொதுக்குழுவில் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்படும். மூன்றாம் நாள் (மே 18) காலை நடைபெறும் வாழ்த்து அரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் உதயநிதி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
அன்று மாலை சுவாமி சிவானந்தா சாலையில் நடைபெறும் பேரணியை, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார். அன்று இரவு நடைபெறும் நிகழ்ச்சியில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் விழாப் பேருரையாற்றுகிறார். இதில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.