கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்துவைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?!

கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்துவைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?!
Published on

சென்னை கிண்டியில் இருக்கும் கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று, கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளான 2021 ஜூன் 3ம் தேதி அறிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதைத் தொடர்ந்து, சுமார் 240 கோடி ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் 1000 படுக்கைகளுடன் தரைத்தளம் மற்றும் ஆறு மேல் தளங்களுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டு  இருக்கிறது. இந்த பன்னோக்கு மருத்துவமனையில் இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்த நாளங்கள், குடல் - இரைப்பை, புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான சிறப்பு அறுவை சிகிச்சை துறைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், இந்த பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க வருமாறு கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு  விடுத்தார். ஜூன் மாதம் 5ம் தேதி இந்த மருத்துவமனையின் திறப்பு விழா என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக குடியரசுத் தலைவரின் வெளிநாட்டுப் பயணத்தால் தமிழகம் வருகை ரத்தானது. அதைத் தொடர்ந்து இந்த மருத்துவமனையை வரும் ஜூன் 15ம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு  இந்த வாரம் தமிழ்நாடு வரும் திட்டம் ஏதும் இல்லை’ என்று குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்து இருக்கிறது. மேலும், குடியரசுத் தலைவரின் பயணங்கள் எதுவும் இறுதி நேரத்தில் திட்டமிடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூன் 15ம் தேதி கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க மாட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது. அதனால் இம்மாதம் 15ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னோக்கு மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com