மேகவெடிப்பு காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் வரலாறு காணாத அளவுக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு பியாஸ் நதியை காட்டாற்று வெள்ளம் பெரிதாக ஆக்கிரமித்து இருக்கிறது. இந்த நதி வெள்ளத்தில் சுமார் முப்பதாயிரம் வீடுகளுக்கு மேல் மூழ்கியதோடு, அவை அடித்துச் செல்லப்பட்டும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பேய் மழை வெள்ளத்தால் பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியமான இடங்கள் எதுவும் இருந்ததற்காக எந்தச் சுவடும் தெரியாத அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. ரயில்வே பாலங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த மழை வெள்ளப் பெருக்கின் காரணமாக, சண்டிகர் – மணாலி இடையேயான நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இமாச்சலப் பிரதேசத்தின் 765 சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் போக்குவரத்து முற்றிலும் முடங்கி இருப்பதோடு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த கனமழை பாதிப்பால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் இமாச்சலப் பிரதேசத்துக்குத் தேவையான அனைத்துவிதமான உதவிகளும் செய்துத் தரப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் செய்தியில், “இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருந்து வரும் மழைக் காட்சிகள் கவலை அளிக்கின்றன. இமாச்சலப் பிரதேச சகோதர, சகோதரிகளுக்கு தமிழ்நாடு துணை நிற்கும்” என்று அவர் அதில் பதிவு செய்து இருக்கிறார்.