இறந்த தமிழக மீனவர் ராஜாவின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! 5 லட்சம் ரூபாய் நிதியுதவி!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இறந்த தமிழக மீனவர் ராஜாவின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய மூன்று பேரும் கடந்த செவ்வாய் அன்று காவிரி ஆற்றை பரிசல் மூலம் கடந்து மறு கரையில் உள்ள கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டைக்கு சென்றதாகக் கர்நாடக வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

வனப்பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த கர்நாடக வனத்துறையினர் அங்கிருந்த மூன்று பேரை சரணடையுமாறு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்ததாகவும், அப்போது அவர்கள் தங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் கர்நாடக வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து அடிபட்ட ராஜாவின் சடலம் பாலாறு நீர் தேக்கப் பகுதியான காவிரி ஆற்றில் கிடந்தது. இதனை காண உறவினர்களும், ஊர்மக்களும் அங்கே குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

இது குறித்து கர்நாடக வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அதுவரை ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என்றும் ராஜாவின் உறவினர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். இதற்கிடையில் ராஜாவின் உயிரிழப்பை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, ஈரோடு மாவட்டம் பர்கூர் போலீசார், ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த மீனவர் ராஜா குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் மீனவரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com