மீனவர் நலம் மற்றும் மாணவ, மாணவியர் விடுதியைத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

மீனவர் நலம் மற்றும் மாணவ, மாணவியர் விடுதியைத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
Published on

மீன் வளத்தைப் பாதுகாத்தல், நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம், குறும்பனையில் 30 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம், தஞ்சாவூர் மாவட்டம், கீழத்தோட்டம் கிராமத்தில் 8 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்குதளம் மற்றும் சேதுபவாசத்திரம் மீனவ கிராமத்தில் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளம், கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரில் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மரபணு ரீதியாக மேம்படுத்தப்பட்ட மீன் விதைப் பண்ணை, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கிராமத்தில் 3 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவிலும், புதுக்குடி கிராமத்தில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்குதளங்கள் என மொத்தம் 56 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (29.09.2023) தலைமைச் செயலகத்தில் இருந்தபடி திறந்து வைத்தார்.

அதையடுத்து, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாகப்பட்டினம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின் நிதி உதவியுடன் 7 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 33 தங்கும் அறைகளுடன் சுமார் 110 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடம் மற்றும் 7 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 33 தங்கும் அறைகளுடன் சுமார் 110 மாணவிகள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம் ஆகியவற்றையும் தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த விடுதிகளில், பொழுதுபோக்கு அறை, ஓய்வறை, உடற்பயிற்சிகூடம், வாசகர் அறை, உணவுக்கூடம், விடுதி பாதுகாவலர் அறை மற்றும் நவீன கழிப்பறை ஆகியவையும் உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.இரகுபதி, அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் ந.கௌதமன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம், மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா இ.ஆ.ப., மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர் கே.சு.பழனிசாமி இ.ஆ.ப., தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் (பொறுப்பு) முனைவர் என்.பெலிக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com