பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீட்டுவசதி வாரிய அடுக்குமாடிக் கட்டடங்களைத் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!

பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீட்டுவசதி வாரிய அடுக்குமாடிக் கட்டடங்களைத் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
Published on

மிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில், 276 கோடியே 15 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வாரியப் பிரிவு அலுவலகக் கட்டடங்கள், சமூதாய நலக் கூடங்கள் போன்றவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சமூகத்தின் அனைத்து வருவாய்ப் பிரிவினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வீட்டுவசதியை ஏற்படுத்தித் தருவதைத் தலையாய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த வாரியம் உயரமான கட்டடங்கள், வணிக மற்றும் அலுவலகக் கட்டடங்கள், மறுகட்டுமானத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், கோவை மாவட்டம் சௌரிபாளையத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பிரிவு அலுவலகக் கட்டடம், விருதுநகர் வட்டம், கூரைகுண்டு கிராம அடுக்குமாடி குடியிருப்பு, நீலகிரி மாவட்டம் கூடலூர் கிராமக் குடியிருப்பு, தேனி மாவட்டம் வடவீரநாயகன்பட்டி கிராம அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முள்ளம் கிராமம், மயிலாப்பூர், திருவான்மியூர் மற்றும் கோவை மாவட்டம் கணபதி கிராமம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள், இதுதவிர சென்னை மாதவரம் மாத்தூரில் அமைந்துள்ள சமுதாயக்கூடம், திருவான்மியூரில் அமைந்த தூண்தளம் மற்றும் ஐந்து தளங்களைக் கொண்ட பத்து உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

இவை தவிர, கோவை மாவட்டம் கணபதியில் உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடிக் குடியிருப்புகள், கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் கிராமத்தில் 70 அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வாரிய பிரிவு அலுவலகக் கட்டடம், சமுதாயக்கூடம் போன்றவற்றையும் முதல்வர் இன்று திறந்து வைத்து இருக்கிறார்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மனை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூர் கிராமத்தில் 56 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள 1603 மனைகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா இ.ஆ.ப., தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் எ.சரவணவேல்ராஜ் இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com