விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே நாட்டார்மங்கலம் பகுதியில் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் ஆளும் திமுக ஆட்சியை பலவாறாக விமர்சனம் செய்து பேசினார்.
அவர் பேசுகையில், "தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், ஓர் அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை அப்படிச் சொல்வதைவிட, அரசு நடப்பதாக, நாடகம் நடத்திக்கொண்டு, நடித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. அண்மையில்கூட விக்கிரவாண்டி பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இது ஏதோ விக்கிரவாண்டியில் மட்டும் நடக்கவில்லை, தமிழக முழுவதும் நடக்கிறது. இதெல்லாம் ஏன் நடக்கிறது என்றால், 24 மணி நேரமும் 'போதை' எங்கும் நிறைந்திருக்கிறது. இந்த ஆட்சியில் மாணவர்கள் சீரழிந்திருக்கிறார்கள். இதுதான் தி.மு.க.வின் இரண்டு ஆண்டுக்கால சாதனை. எங்களுடைய அம்மா, எடப்பாடியார் காலத்தில் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட மடிக்கணினி, இரண்டு ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் வழங்கப்படவில்லை. இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் வாய் திறந்திருக்கிறாரா? கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்றே அவருக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்தால்தானே முதலமைச்சருக்குத் தெரியும்.
கல்வி அமைச்சர் என்ன பண்ணுகிறார் என்றால், 'போஸ்டர் ஒட்டுகிறார்'. உதயநிதி ரசிகர் மன்றத்துக்கு தலைவர் அவர். முதலமைச்சராக இருப்பதற்கே தகுதியற்ற ஒரு நபர் ஸ்டாலின். சொல்புத்தியும், சுயபுத்தியும் இல்லாத முதலமைச்சர் தமிழகத்தை இன்று ஆண்டுக்கொண்டிருக்கிறார். தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் மீது பழியைப் போட்டுக் கொண்டிருக்கிறார். ஆள்வது நீங்கள், பழி எங்கள் மீதா?
ஈரோடு தேர்தலில் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாயை தி.மு.க. கூட்டணி செலவு செய்திருக்கிறது. ஓர் இடைத்தேர்தலில் பணத்தை இரைத்து பெறும் வெற்றி வெற்றியே அல்ல. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இதே தி.மு.க டெபாசிட் இழந்திருக்கிறது. இந்த இடைத்தேர்தல் வெற்றி தி.மு.க. பெற்றது அல்ல. தேர்தல் ஆணையம் தி.மு.க.வுக்கு செய்த உதவியினால் பெற்ற வெற்றி. '40,000 வாக்குகள் அந்த தொகுதியில் இல்லை' என நேரடியாக டெல்லியில் சென்று நான் மனு கொடுத்தேன். ஆனால், தேர்தல் ஆணையம் அதை வாங்கி வைத்துக் கொண்டு மௌனம் காத்தது. அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிரிவினையை வைத்து, அ.தி.மு.க இயக்கத்தை அழித்துவிடலாம் என தி.மு.கவின் அடிமை செயல்பட்டுக் கொண்டிருந்தது. தி.மு.க.வின் அடிமை ஓ.பி.எஸ்.தான்.
தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக தி.மு.க.வின் கைக்கூலியாக, ஏவல் ஆளாக, அடிமையாக செயல்பட்டுக் கொண்டு, தி.மு.க சொல்வதை செய்து கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வில், எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதலமைச்சர் என பல்வேறு பதவிகளை அனுபவித்து ருசி கண்ட பூனை ஓ.பி.எஸ். உங்கள் கனவு என்றும் பலிக்காது ஓ.பி.எஸ். அவர்களே. 'அ.தி.மு.க. ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டது' என்கிறார் ஓ.பி.எஸ். இவர் வந்திருந்தால் அப்படியே கிழித்திருப்பார். இவர் வந்திருந்தால் அ.தி.மு.க அப்படியே அமோக வெற்றி பெற்றிருக்கும்!" என்று காட்டமாகப் பேசி உள்ளார்.