எம்.எஸ்.தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!

எம்.எஸ்.தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!

கிரிக்கெட் உலகின் ஜாம்பான் எம்.எஸ்.தோனிக்கு இன்று 42வது பிறந்த நாள். அதை முன்னிட்டு அவரது ரசிகர்கள், சக விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூகப் பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பல சாதனை மைல் கற்களைத் தாண்டி உலக அளவில் அனைவராலும் பாராட்டப்படும் எம்.எஸ்.தோனிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உங்கள் இணையற்ற சாதனைகள், எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர நம்பிக்கையை அளித்துள்ளது. சென்னைக்காக நீங்கள் விளையாடுவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோனி’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

மிக எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தோனி, 2004ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமாகி, 2019ம் ஆண்டு வரை 90 டெஸ்ட் போட்டிகள், 350 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடி 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ரசிகர்களை உற்சாகக் கடலில் ஆழ்த்தியவர். மேலும், 2007ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை, 2011ம் ஆண்டுக்கான ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் 2013ம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் டிராபி என அனைத்து ஐசிசி உலகக் கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் மகேந்திரசிங் தோனி மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு எம்.எஸ்.தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு ஐதராபாத்தில் அவரது ரசிகர்கள் 77 அடி உயரத்தில் ஆளுயர கட் அவுட் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த வகையில், இந்தியா முழுவதும் அனைவரும் ஒரே மாதிரியாகக் கொண்டாடும் ஒரே இந்திய விளையாட்டு வீரர் எம்.எஸ்.தோனி மட்டும்தான் என்பது தெரிய வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com