விஜய் சார் இவ்வளவு சூப்பரா விளையாடுவார்னு நினைக்கல - செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா..!!

Praggnanandhaa With CM Vijay
Praggnanandhaa With CM Vijay Img Credit: The Hindu
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் எனும் வரலாறு படைத்து இன்று (ஜூன் 8) சென்னை திரும்பிய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா (R.Praggnanandhaa) தலைமை செயலகத்தில் தமிழக முதல் அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து, நார்வே செஸ் 2026 தொடரில் வெற்றி பெற்றதற்காக வழங்கப்பட்ட கோப்பையை முதலமைச்சரிடம் காட்டி வாழ்த்து பெற்றார்.

உலக அளவிலான செஸ் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதீத திறமையுடன் விளையாடி 2025-ல் உலக டாப் 10-ல் நிலை வீரர்களில் ஒருவராக உயர்வு பெற்ற இந்தியாவின் முன்னணி செஸ் விளையாட்டு வீரர்தான் பிரக்ஞானந்தா.

இவர் சமீபத்தில் நார்வே நாட்டில் நடைபெற்ற நார்வே செஸ் தொடர் 2026-ல், இந்தியாவின் சார்பில் பங்கேற்று மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று Norway Chess 2026 சாம்பியன் ஆனார். 20 வயதே ஆன இந்திய வீரர் ஒருவர் முதல் முறையாக வென்ற முக்கிய சர்வதேச தொடர் ஆக இந்த வரலாற்று வெற்றியாக கருதப்படுகிறது.

இவர் ஏற்கனவே மாக்னெஸ் கார்ல்சன் உட்பட உலகின் முன்னணி வீரர்களை எதிர்த்து வெற்றி பெற்றது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நார்வேயின் செஸ் போட்டியின் இறுதி சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை இறுதி போட்டியில் வீழ்த்தி பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி ரூபாய் 50 லட்சத்துக்கான காசோலையை பரிசாக அளித்ததுடன் அவருடன் செஸ் விளையாடியும் அசத்தி உள்ளார் முதலமைச்சர் விஜய்.

இந்த சந்திப்பு குறித்து பேசிய பிரக்ஞானந்தா,

முதலமைச்சரே செஸ் போர்டு எடுத்து வர சொல்லி என்னுடன் விளையாடினார். முதலமைச்சர் இவ்வளவு நன்றாக செஸ் விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை, 15 நிமிடங்கள் விளையாடினோம். சிறப்பான ஆட்டமாக இருந்தது. அதில் நான் வெற்றி பெற்றேன். இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும்தொடர்ந்து வரும் அனைத்து போட்டிகளிலும் மிகவும் சிறப்பாக விளையாடி நாட்டிற்கும் தமிழருக்கும் பெருமை சேர்ப்பேன். விளையாட்டு வீரர்களுக்கு அரசு முன்னுரிமையும் முக்கியத்துவம் அளித்து வருகிறது” எனவும் பிரக்ஞானந்தா கூறினார்.

நார்வே நாட்டின் செஸ் தொடர் பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

logo
Kalki Online
kalkionline.com