

2026 சட்டமன்றத் தேர்தலில், த.வெ.க வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது. தவெக தலைவர் விஜய் சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலுமே அதிக வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றார். விஜய் பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு வித்தியாசம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி - 1,19,454 வாக்குகள் (53,532 வாக்குகள் வித்தியாசம்)
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி - 91,381 வாக்குகள் (27,416 வாக்குகள் வித்தியாசம்)
இதையடுத்து திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், தமிழகத்தில் ஒருவர் இரு தொகுதிகளில் எம்.எல்.ஏவாக இருக்க முடியாது என்ற சட்டம் உள்ளதால், விஜய் பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் வழங்கினர்.
சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஒரு தொகுதியை ராஜினாமா செய்துள்ளார். வரும் 14ஆம் தேதிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், பதவியேற்ற நாளிலேயே ஒரு தொகுதியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.