
நேற்று நடந்த விழாவில் முதல்வரை கௌரவப்படுத்தும் விதமாக தருமை ஆதீனம் பொன்னாடை போர்த்தி ருத்ராட்ச மாலை அணிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்காது ருத்ராட்ச மாலையை முதல்வர் அணிந்து கொண்டது சைவ ஆதீனங்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தருமை ஆதீனம் மவுன விரதம் என்பதால், அவருடைய வாழ்த்துச் செய்தியை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வாசித்தார். ருத்ராட்ச மாலையை முதல்வர் ஏற்றுக்கொண்டதின் மூலமாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனதை புண்படுத்தக்கூடாது என்று பெரியார் வழியில் முதல்வரும் நினைப்பதாக பாராட்டினார்.
சென்ற ஆண்டு தருமபுரம் ஆதீனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு முதலில் தடை விதித்து, பின்னர் நீக்கப்பட்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தருமபுரம் ஆதீனம் நடத்தும் கல்லூரி விழாவில் ஆளுநர் கலந்து கொண்டதைத் தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும் தடை செய்யப்பட்டது.
பட்டினப் பிரவேசத்தை கண்டிப்பாக நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் உள்ளிட்டவர்களும் பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோரும் தெரிவித்தார்கள். பின்னாளில் முதல்வரை சந்தித்த ஆதீனம், ஆன்மீக அரசியல் நடத்துவதாக பாராட்டு தெரிவித்திருந்தார்.
சைவ ஆதீனங்களின் சார்பில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து தடை நீக்கப்பட்டது. இதையெடுத்து நடந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் திரண்டார்கள்.
நேற்று சென்னையில் நடைபெற்ற அறநிலையத்துறை விழாவில் முதல்வர் கலந்து கொண்டார். 2500 கோயில்களுக்கு தலா இரண்டு லட்சம் வீதம் 50 கோடி ரூபாய் நிதி வழங்கும் நிகழ்ச்சியை தமிழக அரசின் அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருந்தது.
விழாவில் பேசிய முதல்வர், 'எங்களை மத விரோதிகளாக சித்தரிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். நாங்கள் மதவாதத்திற்கு எதிரானவர்களே தவிர, மதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல' இது யாருக்கான செய்தி என்பதுதான் புரியவில்லை.