உச்சநீதிமன்ற உத்தரவால் யோகிக்கு நிம்மதி!

முதல்வர் யோகி ஆதித்யநாத்
முதல்வர் யோகி ஆதித்யநாத்
Published on

உத்தரப் பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அரசு வெளியிட்ட வரைவு அறிவிக்கையை தள்ளுபடி செய்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், இதர பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தலை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தது.

உ.பி.யில் 17 மாநகராட்சிகள், 200 நகராட்சிகள் மற்றும் 545 நகர பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் ஜனவரி 31 ஆம் தேதியுடன் முடிவடைவதால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை பொது பிரிவில் சேர்த்து உடனடியாக தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்குமாறும் கூறியிருந்தது.

இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை புறக்கணிக்கும் வகையில், முதல்வர் ஆதித்யநாத்,  “இதர பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு அடிப்படையிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். இதற்காக ஒரு கமிஷன் அமைக்கப்படும் என்று டுவிட்டர் மூலம் தெரிவித்திருந்தார்.

இதர பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை நிர்ணயம் செய்ய ஒரு கமிஷன் அமைக்கப்படும். உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் படி மூன்று விதமான உத்திகள் பின்பற்றப்படும். அதன் பிறகே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும்” என்றும் கூறியிருந்தார்.

அனைத்து சட்ட நுணுக்கங்களையும் பரிசீலித்த பின் தேவைப்பட்டால் உயர்நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் அரசு தயங்காது என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனிடையே அலாகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. உ.பி. அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை நிர்ணயம் செய்ய மாநில அரசு கமிஷன் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. வருகிற மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த பணிகள் முடிந்துவிடும். எனவே அலாகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமர்வு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு குறித்து நியமிக்கப்பட்ட கமிஷன் வருகிற மார்ச் 31 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கலாம். ஆனால், அவர்கள் கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு அதிகாரம் கிடையாது என்று கூறியதுடன் அலாகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கும் தடைவிதித்தது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நிம்மதி அளித்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com