டோக்கியோ - சென்னை நேரடி விமான சேவை மீண்டும் தொடங்க வேண்டும் முதல்வர் கடிதம்!

டோக்கியோ - சென்னை நேரடி விமான சேவை மீண்டும் தொடங்க வேண்டும் முதல்வர் கடிதம்!
Published on

ஜப்பான் மற்றும் சென்னை இடையே மீண்டும் நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் 600-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், கடந்த இருபதாண்டுகளில் ஜப்பான் நாட்டினரின் வருகை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், இந்தியாவில், ஜப்பானிய சமூகத்தின் மிகப்பெரிய தாயகமாக சென்னை திகழ்வதாகவும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில், நிசான், தோஷிபா, யமஹா, கோமேட்ஸு, மிட்சுபிஷி, ஹிட்டாச்சி போன்ற பல ஜப்பானிய பெருநிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளதையும், ஜப்பான்-இந்தியா முதலீட்டு ஊக்குவிப்பு கூட்டாண்மைத் திட்டத்தின்கீழ் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரங்களில், மூன்று தமிழ்நாட்டில் உள்ளது எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் கணிசமான புலம்பெயர்ந்த தமிழர்கள் உள்ளனர். குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி தொடர்பான துறைகளில் அவர்கள் வல்லுநர்களாக உள்ளனர் என கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழகத்திற்கும் ஜப்பானுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருவதுடன், சுற்றுலா வடிவிலும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகள் வளர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜப்பான் மற்றும் சென்னைக்கிடையே நேரடி விமான இணைப்பு இல்லாததால், சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையிலான பயண நேரம் சுமார் 7 மணி நேரம் இரட்டிப்பாகியுள்ளதாகவும், சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள ஜப்பானிய தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருப்பதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com