தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்று இருக்கும் சிவ்தாஸ் மீனா இன்று சென்னை அடையாறு நகர்ப்புற சமுதாய நல மையம், திருவான்மியூர் பாரதிதாசன் சாலை மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் குழந்தைகளோடு குழந்தையாக தரையில் அமர்ந்து நேரடி கள ஆய்வு மேற்கொண்டார். சமுதாய நல மைய ஆய்வின்போது, புறநோயாளிகள் பிரிவையும், வருகைப் பதிவேட்டையும் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர், புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் பதிவு அட்டைகளுக்குப் பதிலாக பதிவுப் புத்தமாக வழங்கிட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து புறநோயாளிகள் காத்திருப்பு அறையினைப் பார்வையிட்ட அவர், நோயாளிகள் அமர கூடுதல் இருக்கைகளைப் போடவும் உத்தரவிட்டார்.
அதையடுத்து, கர்ப்பிணிப் பெண்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்த அவர், கர்ப்பிணிப் பெண்களுக்கான பதிவினை நகர்ப்புற சமுதாய நல மையத்தில் பதிவு செய்து அதன் விவரத்தினை ஆரம்ப சுகாதார நிலையப் பதிவுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அவர்களுக்கு பிரசவத்துக்கு முன்பு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் செவிலியர்களிடம் விசாரித்தார்.
அதைத் தொடர்ந்து அங்குள்ள ஆய்வகத்தை ஆய்வு செய்த அவர், தற்போது இருக்கும் உபகரணங்களின் எண்ணிக்கை, தேவைப்படும் உபகரணங்களின் எண்ணிக்கை விவரத்தை சமர்ப்பிக்கும்படியும், அதன் பேரில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். அப்போது அங்குள்ள மருந்தகத்தைப் பார்வையிட்ட அவர், அத்தியாவசிய மருந்துகளின் இருப்புகள் குறித்து கேட்டறிந்ததோடு, காலாவதியான மருந்துகளை எச்சரிக்கையோடு கையாளும்படியும் மருந்தாளுநருக்கு அறிவுரை வழங்கினார்.
அடுத்ததாக, அங்குள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை பார்வையிட்ட தலைமைச் செயலாளர், அதன் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, குழந்தைகள் மையத்தை சுத்தமாகப் பராமரிக்கவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, குழந்தைகளோடு குழந்தையாக தரையில் அமர்ந்து அவர்களோடு பேசினார். அப்போது, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத் ஐஏஎஸ், தெற்கு வட்டார துணை ஆணையர் எம்.பி அமித் ஐஏஎஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர்.