குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தத் தடை!

குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தத் தடை!

Published on

பொதுவாகவே ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதற்கு ஓர் குறிப்பிட்ட வயது வரம்பு கட்டாயமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான எவ்விதமான சட்டமும் இதுவரை கொண்டுவரப்படவில்லை. உலகிலேயே முதல்முறையாக அயர்லாந்து நாட்டில் அமைந்துள்ள 'கிரிஸ்டோன்ஸ்' என்ற ஊரில், குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பத்து வயதிற்குப் பிறகு குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதே, அவர்களின் உடல் நலத்திற்கும் மனநலத்திற்கும் நல்லது என பல மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், இதைப்பற்றி பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் சில பெற்றோர் இதைப் பின்பற்றுவதில்லை. தன் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற நாள்தோறும் சிந்திக்கும் பெற்றோர்கள், ஸ்மார்ட்போனால் அவர்கள் பாதிக்கப்படும் விஷயத்தில் கோட்டை விடுகின்றனர். 

யூடியூபில் கார்ட்டூன் பார்த்தால்தான் எங்கள் குழந்தை தூங்குகிறது, ஸ்மார்ட்ஃபோனில் வீடியோ பார்த்துக்கொண்டே குழந்தை நன்றாக சாப்பிடுகிறான் என பல காரணங்களைச் சொல்லி, குழந்தைகளின் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டை அதிகரிக்க பெற்றோரே உதவி செய்கின்றனர். இதன் அடிப்படையில், அதிகமாக ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் குழந்தைகளிடையே பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. 

அந்த ஆய்வு முடிவுகளில் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தாத குழந்தைகளை விட, ஸ்மார்ட்ஃபோன் அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள், உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்து அதிக பாதிப்புகளை எதிர்கொள்வதாகத் தெரியவந்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகளும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் கொடுப்பதைத் தவிர்ப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். 

அந்த வரிசையில் உலகிலேயே முதன்முறையாக அயர்லாந்து நாட்டில் அமைந்துள்ள 'கிரிஸ்டோன்ஸ்' என்ற ஊரில் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த ஊரிலுள்ள ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், குழந்தைகள் நல சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளனர். 

இதன் மூலமாக அந்த ஊரிலுள்ள குழந்தைகள் தங்களின் மேல்நிலைக் கல்விக்குச் செல்லும் வரையில், பொது இடங்களிலோ, பள்ளியிலோ, வீட்டிலோ ஸ்மார்ட்போன் பயன்படுத்த அனுமதி கிடையாது. இது அந்த ஊரில் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவாகும். அயர்லாந்து நாட்டு அரசுக்கும் இந்த முடிவுக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது. 

இது குறித்து அந்த ஊரிலுள்ள பள்ளி சங்கங்கள் தெரிவிப்பது என்னவென்றால்," ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் குழந்தைகளின் இளமைப் பருவம் அழிந்து வருகிறது. தற்போதைய குழந்தைகள் சமூக வலைதளங்களில் அதிகமாக மூழ்கி இருக்கிறார்கள். அங்கேயே நண்பர்களை அமைத்துக்கொள்ளவும் விரும்புகிறார்கள். இதனால் நேரில் உள்ள நபர்களிடம் நட்பாகப் பழகுவதில்லை. 

இது எதிர்காலத்தில் அவர்களுக்கு தனிமை உணர்வு மற்றும் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் மேல்நிலை வகுப்புகளுக்கு செல்லும் வரை ஸ்மார்ட் போன் பயன்படுத்தத் தடை விதித்துள்ளோம். அதே சமயத்தில் டிஜிட்டல் யுகத்திலும் அவர்களுக்கு எவ்விதமான பின்னடைவும் ஏற்படாத வகையில், அவ்வப்போது அவர்களுக்குக் கம்ப்யூட்டர் வகுப்புகள் எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளனர். 

இந்த முயற்சிக்கு பலதரப்பு மக்களிடமிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது. சிலர், குழந்தைகளின் தனியுரிமையில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பையும் தெரிவிக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com