

உலகம் முழுவதுமே சமூக வலைதளங்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுவும் குறிப்பாக 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அதாவது, பதின்ம வயதினர் அதிகமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு சிறுவர்கள் அதிகளவு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. சமூக ஊடகங்கள் குழந்தைகளின் சுயமரியாதைக்கு தீங்கு விளைவிக்கும். சமூக வலைதளத்தில் அதிகநேரம் செலவிடும் குழந்தைகள் சமூகத்தோடு இணைந்து செயல்படாமலும் உளவியல் ரீதியான பாதிப்புக்கும் ஆளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் உலகம் முழுவதும் சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சில நாடுகள் சமூக ஊடக பயன்பாட்டைத் திறம்பட கட்டுப்படுத்த முயன்றாலும், அவை தோல்வியடைந்தன.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், எக்ஸ், யு டியூப், ஸ்னாப்சாட் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் குழந்தைகளின் மனம், உடல் நலம் பாதிக்கப்படுவதால் அதை தடை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் வலியுறுத்தினார். அவரின் கருத்துக்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டம் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ தடை விதித்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா பிரதமர் வரும் டிசம்பர் 10-ம் தேதியில் இருந்து ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியாது என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் தற்போது அந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவும் சேர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாகவும் ஆஸ்திரேலியா மாறுகிறது.
இதேபோல் மற்ற நாடுகளும் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது. கவனிக்குமா உலக நாடுகள்....