குழந்தைக்கு கை அகற்றப்பட்ட விவகாரம்: மருத்துவர், செவிலியர் மீது போலீசில் பெற்றோர் புகார்!

குழந்தைக்கு கை அகற்றப்பட்ட விவகாரம்: மருத்துவர், செவிலியர் மீது போலீசில் பெற்றோர் புகார்!
Published on

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தையின் ஒரு கை அகற்றப்பட்ட விவகாரத்தில் அந்தக் குழந்தையின் பெற்றோர், மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்கள். இது குறித்து அந்தக் குழந்தையின் தாய் அஜிஸா செய்தியாளர்களிடம் கூறியபோது, “எனது குழந்தையின் இந்த நிலைக்கு மருத்துவமனையின் ஒரு செவிலியர்தான் முக்கியமான காரணம். அதேபோல், அன்று பணியில் இருந்த ஒரு மருத்துவரும் இதற்குக் காரணம். அதனால் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களுக்குப் பின்னணியில் யாரும் கிடையாது. எனது குழந்தைக்கு நடந்ததுபோல் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் நான் இத்தனை போராடுகிறேன். இந்த விவகாரம் தமிழக அரசின் காதுகளைச் சென்றடைய வேண்டும். அதைத் தாண்டியுள்ள இடங்களுக்கும் இந்த விஷயம் பரவ வேண்டும். என் பிள்ளைக்கு ஒரு நல்ல முடிவு கிடைத்தால் போதும். அதேபோல், எங்களை மருத்துவத்துறை அதிகாரிகள் யாரும் மிரட்டவுமில்லை, எங்களுக்கு யாரும் எதுவும் சொல்லிக்கொடுக்கவும் இல்லை. ஆனால், இன்று மருத்துவத்துறை சார்பாக பேசியவர்கள் அனைவரும் எதிர்மறையாகத்தான் பேசினார்கள்.

குழந்தை பிறந்தபோது, அவனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மூன்று மாதங்கள் கழித்துத்தான், அவனது தலையில் நீர் இருக்கிறது என்று கூறினார்கள். வேறு எந்த பிரச்னையும் குழந்தைக்கு இருப்பதாக சொல்லவே இல்லை. மூளையில் நீர் கசிவு இருப்பதாக யாரும் சொல்லவில்லை. ‘குறைமாதத்தில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் இதயத்தில் கோளாறு இருக்கும். ஆனால், அது ஒரு வருடத்தில் சரியாகும்’ என்றுதான் சொன்னார்கள்" என்று அவர் கூறி இருக்கிறார்.

முன்னதாக, 'அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் ஒரு கையை எடுக்காவிட்டால், குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தால், மூன்று பேர் அடங்கிய உயர் மட்டக்குழு ஒன்றின் மூலம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது' என்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் விளக்கம் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com