
சீனாவில் உள்ள புவியியல் ஆய்வாளர்கள் தங்கள் நாட்டில் விரைவில் ஒரு பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்துள்ளனர். சீனாவின் பத்திரிக்கையான சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில், பெய்ஜிங் பூகம்ப அமைப்பின் மூத்த பொறியாளர் ஜு ஹாங்பின் குழு ஒரு ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சீனாவை எச்சரித்துள்ளது.
இந்த குழு சீனாவின் 150 ஆண்டுகால பூகம்பங்களை அடிப்படையாகக் கொண்ட தரவுகளை ஆராய்ந்து ஒரு அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த அறிக்கையின் படி விரைவில் சீனாவில் எப்போது வேண்டுமானாலும் 8 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என்று எச்சரித்து உள்ளது. இந்த கணிப்பு உண்மையாகிவிட்டால், சீனாவின் பல பகுதிகள் மோசமாக அழிவிற்குள்ளாகும். இந்த அறிக்கை சீன அரசாங்கத்தின் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
சீனாவின் புவியியல் ஆய்வாளர்கள்
கடந்த 150 ஆண்டுகளில் நிகழ்ந்த 12 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்த போது, கிழக்கு ஆசியாவின் பாமிர்-பைக்கால் நில அதிர்வுப் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் உணரப்பட்டதாக கண்டறிந்துள்ளனர்.
இங்குள்ள டெக்டோனிக் தகடுகளுக்கு இடையே அதிகரித்த உராய்வுதான் நிலநடுக்கத்திற்கு முக்கிய காரணம்.
இவற்றில், சீனாவுக்கு அருகில் மட்டுமே 5 நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. இப்போது, அதன் ஆறாவது சுழற்சி காரணமாக, சீனா முழுவதும் பூகம்ப அதிர்வுகள் ஏற்படக் கூடும். சீனாவின் சிச்சுவான், யுன்னான் மாகாணங்கள் மற்றும் இமயமலைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக இருக்கும்.
சமீபத்தில் மியான்மரில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு இந்த கணிப்பு சீன அரசாங்கத்தை பெரிய அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அது போன்ற ஒரு நிலநடுக்கம் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ள சீனாவில் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் இழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும். மக்கள் தொகை அடிப்படையிலும் சீனா பெரிய நாடு.
2008 ஆம் ஆண்டு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஒரு நிலநடுக்கம் உணரப்பட்டது, அதில் பெரிய அளவில் இழப்புகள் இல்லா விட்டாலும் அடுத்து வர உள்ள நிலநடுக்கம் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும், இந்த ஆண்டு பூகம்பம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இன்னும் இல்லை என்று சீன அரசாங்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சமீபத்தில், மியான்மரில் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 3000 பேரை பலியாகி உள்ளனர். ஆயினும், இந்த எண்ணிக்கையை பலரும் சந்தேகக் கண்ணில் பார்க்கின்றனர். மியான்மர் ஒரு இராணுவ சர்வாதிகார நாடு என்பதால், அது உண்மையான பலி எண்ணிக்கையை மறைத்து இருக்கும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். மியான்மர் அரசும் புள்ளி விவரங்களை மறைக்க, ஊடக அறிக்கையிடலைத் தடை செய்துள்ளது. அதனால் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து இறந்திருக்கலாம் என்று அஞ்சுகின்றனர்.
சீனாவில் இந்த ஆண்டு பூகம்பம் ஏற்படும் என்று கணித்த புவியியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஒருவேளை நிலநடுக்கம் ஏற்பட்டால் சீனாவில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகிவிடும், மேலும் அதனால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சறுக்கலையும் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றனர். இயற்கை பேரழிவை எந்த தொழில் நுட்பத்தாலும் தடுக்க முடியாது. இன்று அதிகாலையில் சீனாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், ஆய்வாளர்களின் எச்சரிக்கையை புறம் தள்ளாமல் கவனமாக இருப்பது நல்லது.