meta property="og:ttl" content="2419200" />
ஜப்பான் நாட்டின் மிக முக்கிய ஆவணங்களை இணையம் வழியாக சீனா ஹேக் செய்துவிட்டது என தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் ஜப்பானின் சில முக்கிய ரகசியங்கள் சீனாவுக்கு தெரிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஜப்பான் மற்றும் சீனாவுக்கு இடையே பல விவகாரங்களில் மோதல் போக்கு உள்ளது. குறிப்பாக ஜப்பான் அமெரிக்காவின் நட்பு நாடாக இருப்பதே இவர்களின் மோதலுக்கு முதல் காரணமாகும். மேலும் ஜப்பானின் கடலிலும், தெற்கு சீனக் கடலிலும் சீனா ஆக்கிரமித்துள்ளதால், இதை ஜப்பான் எதிர்த்து வருகிறது. அதேசமயம் சீனாவுக்கு எதிராக இதே கடல் பகுதிகளில் மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் பிரச்சனை கொடுத்து வருகின்றன. இங்கு சீனா சிறுசிறு தீவுகளை அமைத்து அவர்களின் ராணுவத்தை குவித்துவருகிறது.
இதெல்லாம்போக மறுபுறம், ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையத்தின் கழிவு நீரை கடலில் வெளியேற்றுவதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்டு தற்போது செயலிழந்திருக்கும் புகுக்ஷிமா அணு உலையில், லட்சக்கணக்கான லிட்டர் அணு உலைக் கழிவுநீர் உள்ளது. 2019 நிலவரப்படி, இந்த அணு உலையில் ஒரு மில்லியன் கன மீட்டர் அளவிலான அணுமாசு நீர் உள்ளதாகத் தெரிகிறது. இந்த நீரை எப்போதும் இப்படியே சேமித்து வைத்திருக்க முடியாது.
எனவே இந்த நீரை சுத்தம் செய்து கடலில் வெளியிட ஜப்பான் முடிவு செய்ததால், இது சீனாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அணுக்கழிவு நீரை கடலில் வெளியேற்றக்கூடாது என்பதில் சீனா தீர்க்கமாக உள்ளது. ஏனென்றால் ஜப்பானின் கடல் பகுதியை சீனாவும் பகிர்ந்து கொள்வதால், சீனாவின் சுற்றுலா, கடல் வளம், மீன்பிடிப்பு, இயற்கை வளம் போன்ற பல விஷயங்கள் பாதிக்கப்படும் என சீனா கருதுகிறது.
இத்தகைய பிரச்சனை இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் நிலையில் புதிதாக ஜப்பான் நாட்டின் பாதுகாப்புத்துறையின் முக்கிய ஆவணங்களை சீனா ஹேக் செய்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த ஹேக்கிங் கடந்த 2020லேயே நடந்து விட்டதாம். இந்த ஹாக்கிங்கில் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் குறித்து ஜப்பானியிடம் இருந்த முக்கிய ஆவணங்களும் சீனா கைப்பற்றிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்த செய்தி தற்போது சர்வதேச ஊடகங்களில் வெளியாகி அமெரிக்கா மற்றும் ஜப்பானை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.