பூமியில் அடியில் மிகப்பெரிய குழியை தோண்டும் சீனா! ஏன்? எதற்கு?

பூமியில் அடியில் மிகப்பெரிய  குழியை தோண்டும் சீனா! ஏன்? எதற்கு?

சீனாவில் உள்ள Tarim Basin என்ற பகுதியில் பூமிக்கு அடியில் 11 கிலோ மீட்டர் ஆழத்திற்கு குழி தோண்டும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது. ஆழத்திலிருந்து என்ன கிடைத்தாலும் நாளை உலகத்திற்கு கிடைக்கும் பெரிய பரிசாக இருக்கும் என்று சீனா அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். எவரும் யோசிக்காத திட்டத்தை சீனர்கள் தீவிரமாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பூமியின் ஆழத்தை ஆராய்வது குறித்த திட்டங்களை சீன அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது. ஆரம்ப கட்ட ஆய்வுகளுக்குப் பின்னர் தற்போது தோண்டும் பணிகளை ஆரம்பித்திருக்கிறார்கள். எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட விஷயங்கள் அடி அழத்தில் இருக்கிறதா என்பதை கண்டறிவது, பூமிக்கடியில் தண்ணீர் மற்றும் வேறு ஏதாவது பொருட்கள் கிடைக்குமா என்பது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும் திட்டத்தின் நோக்கமாக கருதப்படுகிறது.

11 கிலோ மீட்டர் ஆழம் என்பது பல்வேறு அடுக்குகளை கொண்டது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உருவான அடுக்குகளை கடந்து செல்ல வேண்டியிருக்கும். உள்ளே இருக்கும் வெப்பத்தில் நவீன உபகரணங்கள் உருகிவிட்டால் திட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்படுக்கூடும்.

தோண்டும் பணி, ஒன்றரை ஆண்டுகளுக்கு தொடர இருக்கின்றன. இதற்கு பல கோடி ரூபாய் செலவழிக்கப்படும். ஏராளமான நவீன உபகரணங்கள், இயந்திரங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதுவரையில் ஏராளமான முறை தரைக்கு அடியில் பள்ளம் தோண்டப்பட்டிருக்கிறது. 20 ஆயிரம் மீட்டர் ஆழத்தை தாண்டினால் வெப்பத்தின் காரணமாக தோண்டும் பணி தடைப்பட்டுவிடும்.

35 ஆண்டுகளுக்கு முன்னர் 12 ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. இதுதான் இதுவரை தோண்டப்பட்டதிலேயே அதிகமான ஆழம் கொண்டது. ஏறக்குறைய 20 ஆண்டுகள் காலம் வரை பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. ரஷ்யாவில் ஒரு பெரும் திட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

பெரும் பொருட்செலவில் கடுமையான உழைப்பை செலுத்தி ஏன் இந்த திட்டத்தை சீன அரசு முன்னெடுக்கிறது என்கிற கேள்வி உலக நாடுகளில் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது. எதையும் காரணமில்லாமல் சீன அரசு செய்யப்போவதில்லை. சர்வதேச கவனத்தை பெறுவதற்காக கூட இத்தகைய நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கலாம்.

பூமி ஆழத்தின் எல்லையை தொடுவது என்பதையே திட்டத்தின் நோக்கமாக அறிவித்திருக்கிறது. வானத்தின் எல்லையைக் கூட தொட்டுவிடலாம். ஆனால், பூமியின் ஆழத்தை கண்டறிவது கடினம் என்கிறார்கள். சீனர்கள் என்ன கண்டுபிடிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com